தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இதய நோய்களை விரைவாகக் கண்டறியும் ‘ஏஐ’; மூன்று மருத்துவமனைகளில் சோதனை

2 mins read
e576a42f-cadb-4406-a1eb-7477ebd49257
சென்ஸ் என்று அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பம் தேசிய இதய நிலையம், தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, டான் டொக் செங் மருத்துவமனை ஆகியவற்றில் சோதனையிடப்படவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிதாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம்மூலம் இதயத்தை வேகமாகப் பரிசோதிக்கவும் இதய நோய்க்கான சிகிச்சைகளை விரைவாகச் செய்யவும் சோதனை முறையில் ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அந்தச் சோதனை ஓட்டம் சிங்கப்பூரின் மூன்று பொது மருத்துவமனைகளில் ஓர் ஆண்டுக்கு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்ஸ் என்று அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பம் தேசிய இதய நிலையம், தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, டான் டொக் செங் மருத்துவமனை ஆகியவற்றில் சோதனையிடப்படவுள்ளது.

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு முதல் அந்தச் சோதனைத் திட்டம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மூன்று மருத்துவமனைகளிலிருந்து மட்டும் 300 நோயாளிகள் இந்தச் சோதனைத் திட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சென்ஸ் தொழில்நுட்பம்மூலம் நோயாளியின் இதய நோய்க்கான ஆபத்தை 10 நிமிடங்களுக்குள் கணக்கிட முடியும் என்று கூறப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவப் பரிசோதனைகள்மூலம் நோயாளியின் இதய நோய்க்கான ஆபத்தைக் கண்டறியக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரம் எடுக்கும்.

சில நேரங்களில் நான்கு மணி நேரத்திற்கு மேல்கூட தற்போதுள்ள மருத்துவச்சோதனைகள் எடுக்கும் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக ‘சிடி ஸ்கேன்’களில் இதயக் குழாய்களில் எவ்வளவு கால்சியம் படிந்துள்ளது, இதயத் திசுக்களில் எத்தனை கொழுப்பு உள்ளது ஆகியவற்றைக் கண்டறிய உதவும். அதை இந்த சென்ஸ் தொழில்நுட்பம் எளிதாக மாற்றியுள்ளது.

இதுவரை சென்ஸ் தொழில்நுட்பம்மூலம் செய்யப்பட்ட சோதனையில் அதன் துல்லியமான முடிவுகள் 85 விழுக்காட்டிலிருந்து 99 விழுக்காடு வரை பதிவாகியுள்ளது.

தற்போது நடத்தப்படும் இந்த ஓர் ஆண்டு சோதனை ஓட்டம் மேலும் பல தரவுகளைத் தரும் என்றும் இதன் மூலம் இதய நோய்க்கு எதிராக மருத்துவத்துறையில் புதிய சாதனை படைக்கப்படும் என்றும் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்