மாணவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் எழும் பிரச்சினைகளைப் பிரதமர் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் சுட்டினார்.
“தன் மாணவர்களின் கட்டுரைகளின் தரம் கிட்டத்தட்ட ஓர் இரவில் வளர்ச்சிகண்டதாக என்னிடம் ஓர் ஆசிரியர் கூறினார். தான் அப்படி என்னச் செய்து இவ்வளவு பெரிய மாற்றம் உண்டானது என்று அவர் அதிர்ச்சியடைந்தார்.
“அப்போதுதான் மாணவர்கள் சேட்ஜிபிடி பயன்படுத்தி தம் எழுத்தை மேம்படுத்தியதாக அவர் கண்டுபிடித்தார்,” என்றார் பிரதமர் வோங்.
“இன்று மாணவர்கள் அளவுக்கதிகமாக ஏஐயை நம்பியிருக்கக்கூடும்; அவர்கள் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளப் போதிய முயற்சியை எடுக்கமாட்டார்கள்; அதனால் அவர்கள் சுயமாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்ளாமல் போகலாம் எனும் மனக்கலக்கம் இன்று வளர்ந்துவருகிறது,” என்றும் பிரதமர் கூறினார்.
மின்னிலக்க யுகத்தில் தகவல்களை இன்னும் எளிதில் பெற முடிவதால், புதிய வகைகளில் பிறருடன் இணைய முடிவதால் இத்தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் என்றார் பிரதமர்.
அதே சமயம், அவற்றின் பாதகங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டு அவற்றைப் பாதுகாப்பாக நிர்வகிக்க வேண்டும் என்றார் பிரதமர். “அதாவது, பாதகங்களிலிருந்து இளையரைப் பாதுகாப்பதிலும், தொழில்நுட்பம்மூலம் பயன்பெற ஆற்றல்படுத்துவதிலும் சமநிலைக் காண வேண்டும்,” என்றார் பிரதமர்.