செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ)தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் மூக்குக்கண்ணாடிகள் பயனாளர்களுக்கு எவ்வாறு கைகொடுக்கும் என்று அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்று எடுத்துக்கூறியது.
சிங்கப்பூரில் உள்ள பார்வையிழந்தோர், பார்வைக் குறைபாடு உடையோர், மூக்குக்கண்ணாடிகளைத் தயாரிப்போர், கொள்கை வகுப்பாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர், மெட்டா நிறுவனத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
உடற்குறையுள்ளோர், அன்றாட வாழ்க்கையில் கூடுதல் சுதந்திரத்துடன் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ரே-பான் மெட்டா, ஓக்லி மெட்டா மூக்குக்கண்ணாடிகள் எவ்வாறு உதவுகின்றன என்பது நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது.
ஒரு பொருளில் எழுதப்பட்டிருப்பதைப் படித்தல், பொருள்களைக் கண்டறிதல், முன்பின் செல்லாத இடங்களுக்குப் போய்வருதல், உடனுக்குடன் செய்தியைத் தெரிந்துகொள்ளுதல் உள்ளிட்டவற்றிற்கு இவை உதவுகின்றன.
கண்முன் நிழலாடும் காட்சியை விவரித்தல், உடனுக்குடன் மொழிபெயர்த்தல் போன்ற சேவைகளுக்கு ‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் இந்த மூக்குக்கண்ணாடிகள் கைகொடுக்கின்றன.
‘என் கண்களாக இருங்கள்’ எனும் பொருள் கொண்ட ‘பீ மை ஐஸ்’ எனும் செயலியைப் பயன்படுத்துவதற்குக் கைப்பேசியை நாடாமல், மூக்குக்கண்ணாடிகள் மூலமாகவே தேவையான உதவியை அப்போதே பெறலாம்.
இந்த அதிநவீனத் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது வந்திருந்தவர்களுக்குச் செயல்விளக்கத்தின்மூலம் எடுத்துக்காட்டப்பட்டது.
அதோடு, புத்தாக்கமிக்க கண்டுபிடிப்புகள் பற்றிய கலந்துரையாடல்களிலும் பலர் பங்கேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சட்ட அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தற்போது உலகம் முழுதும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு வகையான உடற்குறைபாட்டுடன் வாழ்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 340 மில்லியன் பேர் பார்வையிழந்தோராக அல்லது பார்வைக் குறைபாடு உடையவர்களாய் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
“நாங்கள் பார்வையிழந்தோரிடம் அவர்களின் நிலைமையைப் பற்றிப் பேசினோம். அவர்களின் கைகளில் ஏற்கெனவே ஒரு கைத்தடி, வழிகாட்டி நாய்கள், அல்லது கைப்பேசி இருப்பதை அவர்களுடன் உரையாடியபோது நாங்கள் தெரிந்துகொண்டோம்,” என்று ஆசிய பசிபிக் கொள்கைத் திட்ட, இயக்கங்களுக்கான இயக்குநர் சாந்தி அலெக்சாண்டர் குறிப்பிட்டார்.
“சில நேரங்களில், அவை இடையூறுகளாக அமைந்துவிடும். ஆனால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயங்கும் மூக்குக்கண்ணாடிகள் இடையூறுகளாக இருக்காமல், அவர்களுக்குச் சுற்றுப்புறத்தைப் பற்றிய பயனுள்ள தகவல்களை அளிக்கும்,” என அவர் கூறினார்.
மெட்டா முன்னெடுத்துள்ள முயற்சிகள்
பயனீட்டாளர்களை முன்னிலைப்படுத்தி, மெட்டா ரே-பான் மெட்டா, ஓக்லி மெட்டா உள்ளிட்ட இந்த மூக்குக்கண்ணாடிகளை நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.
ரே-பான் மெட்டா, ஓக்லி மெட்டா மூக்குக்கண்ணாடிகள் இரண்டிலும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
‘அணியக்கூடிய கருவிகளை உருவாக்கும் வழிகாட்டி’ எனும் புதிய தளத்தையும் நிகழ்ச்சியில் மெட்டா அறிமுகப்படுத்தியது.
‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் இயங்கும் மெட்டாவின் மூக்குக்கண்ணாடிகளுக்கு ஏற்ற அம்சங்களை உருவாக்க அந்தத் தளத்தின் மூலமாக, மென்பொருள் தயாரிப்பாளர்கள் வழிகாட்டுதலைப் பெறலாம்.
இது உடற்குறையுடையோரின் அன்றாட வாழ்க்கையை மேலும் எளிதாக்குவதற்கான அம்சங்களை உருவாக்க வழிவகுக்கும்.

