செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைச் சமூகத்தினரிடம் கொண்டுசெல்ல நடவடிக்கை

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைச் சமூகத்தினரிடம் கொண்டுசெல்ல நடவடிக்கை

2 mins read
58a9e2d0-0447-443d-9a71-1d63af76434a
‘புவாங்கோக் ஸ்குவேர்’ கடைத்தொகுதிக்கு அருகே பொது நீர்ப்பூங்காவைத் திறந்துவைத்தபோது மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிடம் தனது அன்பைப் பகிர்ந்துகொண்டான் இச்சிறுவன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூகத்தினருக்குச் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பம் குறித்தும் அதனைப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும் கற்றுத் தருவதற்கு கெபுன் பாரு வட்டாரத்தைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு ஆர்வலர் குழு இலக்கு கொண்டுள்ளது.

அதன் தொடர்பில் மக்களைச் சென்றடையும் நடவடிக்கைகளுக்காக ‘ஏஐ சிங்கப்பூர்’ போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது ‘குட் ரோபோ’ எனப்படும் அந்த ஆர்வலர் குழு.

இதுபற்றி விளக்கிய கெபுன் பாரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்ரி குவெக், “குட் ரோபோ குழுவின் தொண்டூழியர்களில் நானும் ஒருவன். ஏஐ தொழில்நுட்பம் குறித்த அறிவை நாங்களும் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு, அதனை சமூகச் சேவைக்குப் பயன்படுத்துவோம்,” என்று சொன்னார்.

அத்தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடந்த குடும்ப தின விழாவில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்குத் தலைமையேற்கும் அடித்தளத் தலைவரான திரு டான் வய் சோங், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டுசெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

“செயற்கை நுண்ணறிவு என்பது சிக்கலான தொழில்நுட்பம் எனக் கருதி, பலரும் அதனைக் கண்டு அஞ்சுகின்றனர். அந்த மனப்பான்மையை மாற்ற முடியும் என நம்புகிறோம்,” என்றார், ‘டேட்டா கனெக்ட் டெக்னாலஜிஸ்’ எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமைத் தரவு அதிகாரியான திரு டான்.

தொடக்கப் பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த ‘ஏஐ சிங்கப்பூர்’ அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பத்தைப் பெரிதும் பயன்படுத்துவோருக்கு ‘பைத்தன்’ நிரலாக்கமொழி போன்றவை தொடர்பான பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்படும்.

இத்தகைய நடவடிக்கைகளிலும் பயிலரங்குகளிலும் பங்கேற்க பொதுமக்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கெபுன் பாரு குடும்ப தின நிகழ்ச்சியிலும் அதே நாளில் புவாங்கோக் ஸ்குவேர் கடைத்தொகுதியில் நடந்த ஜாலான் காயு தின நிகழ்ச்சியிலும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கலந்துகொண்டார்.

ஜாலான் காயு சமூக நிகழ்வில் 18 முதல் 35 வயதிற்குட்பட்டோருடன் திரு லீயும் இங் லிங் லிங் எம்.பி.யும் நட்பும் உறவும் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கேற்றனர்.

அத்துடன், அக்கடைத்தொகுதிக்கு அருகே ‘புவாங்கோக் ஸ்குவேர் அக்வாட்டிக் தீம் பார்க்’ எனும் பொது நீர்ப்பூங்காவையும் திரு லீயும் திரு இங்கும் திறந்து வைத்தனர்.

குறிப்புச் சொற்கள்