சிங்கப்பூரின் ஊழியரணியைச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களுக்குத் தயார்செய்யும் முயற்சிகளை வேகப்படுத்த கூகல் நிறுவனமும் சிங்கப்பூரின் கல்வி அமைச்சும் இணைந்து கற்றல் ஆய்வுக்கூடங்களை உயர்கல்வி நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) தொடங்கி உள்ளன.
‘கூகல் ஏஐ லிவிங் லேப்’ என்னும் பெயரிலான அந்த ஆய்வுக்கூடம் சிங்கப்பூரில் கடந்த ஆண்டு கால்பதிக்கத் தொடங்கியது.
2025 அக்டோபரில் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (கிழக்கு வளாகம்) செயற்கை நுண்ணறிவுக் கற்றல் ஆய்வுக்கூடம் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.
அடுத்தடுத்து நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியிலும் பிற கல்வி நிலையங்களிலும் அத்தகைய ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது. 2027ஆம் ஆண்டுக்குள் அவை நிறுவப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்து ‘கூகல் சிங்கப்பூர்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பென் கிங் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
சிங்கப்பூர் இளையர்களைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவுத் திறனைச் சரளமாகப் பயன்படுத்துவது என்பது கணிதம் கற்பதைப் போன்றதோர் அடிப்படை அம்சம்.
அந்த வகையில், ஒவ்வொரு சிங்கப்பூரரும் இளம்பருவம் முதலே தங்களுக்கேற்ற செயற்கை நுண்ணறிவுத் திறன் பெற்றிருப்பதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் அந்த நோக்கத்தில்தான் செயற்கை நுண்ணறிவு கற்றல் ஆய்வுக்கூடத்தை சிங்கப்பூரில் தொடங்கி உள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஏறத்தாழ 50,000 சிங்கப்பூர் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆக அண்மைய செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கங்களை அந்த ஆய்வுக்கூடங்கள் போதிக்கும் என்றார் திரு பென் கிங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
புத்தாக்கங்களைப் புரிந்துகொள்வதோடு நின்றுவிடாமல், செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து புதிய திறன்களை அவர்கள் படைக்க வேண்டும் என்பது முக்கியமானது.
வருங்காலத் தொழில்நுட்பத்தைக் கல்விக்கூடங்களுக்கு நேரடியாகக் கொண்டு வருகிறோம். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு முன்னேற்றம் சிங்கப்பூரர்களின் வகுப்பறையில் தொடங்குவதை உறுதிசெய்யவே அவ்வாறு செய்கிறோம் என்றார் திரு பென் கிங் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு கற்றல் ஆய்வுக்கூடம் 325 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவுக் கோட்பாடுகளை இயல்பான பயன்பாட்டுக்கு மாற்றம் செய்யும் திறனுடன் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

