சிங்கப்பூரில் அலுவலகம் அமைக்கும் ஏஐ சட்ட நிறுவனமான ‘ஹார்வி’

சிங்கப்பூரில் அலுவலகம் அமைக்கும் ஏஐ சட்ட நிறுவனமான ‘ஹார்வி’

2 mins read
3c60b48e-2bd0-408b-9ca3-99bf07bd903d
இந்த வட்டாரத்தில் ஏஐ உதவிக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதாக ‘ஹார்வி ஏஐ’ கூறியது. - சித்திரிப்புப் படம்: சாவ்பாவ்

சான் பிரான்சிஸ்கோவில் தளம்கொண்டுள்ள சட்டத் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஹார்வி ஏஐ’ சிங்கப்பூரில் அலுவலகம் அமைக்கவுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள முன்னணிச் சட்ட நிறுவனங்கள் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் அடங்கும்.

இங்குள்ள அலுவலகத்தில் விற்பனை, செயல்பாடுகள் பிரிவுகளிலும் சட்டப் பொறியாளர் பதவிகளிலும் 32க்கும் மேற்பட்டோரைப் பணியில் அமர்த்த அந்நிறுவனத்திற்குத் திட்டம் உள்ளது.

உள்ளூர் அலுவலகத்தை வரும் ஜூன் மாதம் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள அதன் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக அந்த அலுவலகம் அமைகிறது.

அந்நிறுவனம் இந்தியாவின் பெங்களூரு, ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய இடங்களில் அலுவலகங்களை அமைத்தபிறகு, இந்த வட்டாரத்தின் மூன்றாவது இடமாக இங்கு அலுவலகத்தை நிறுவவுள்ளது.

“சிங்கப்பூரில் நமக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதனால், அவர்களுக்கு ஆதரவு வழங்குவது மிக முக்கியம்,” என்று ‘ஹார்வி’யின் தலைமைச் செயலாக்க அதிகாரி கேட்டி பர்க் மின்னஞ்சல்வழி நடைபெற்ற நேர்காணலில் கூறினார்.

‘ராஜா & டான்’, ‘டுரூ & நேப்பியர்’, ‘வோங்பார்ட்னர்ஷிப்’ ஆகிய முன்னணிச் சட்ட நிறுவனங்கள் சிங்கப்பூரில் உள்ள அதன் வாடிக்கையாளர்களில் அடங்கும்.

சட்டம் தொடர்பான செயற்கை நுண்ணறிவு குறித்து சிங்கப்பூரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிகளைக் குறிப்பிட்டுச் சொன்ன திருவாட்டி பர்க், இந்த வட்டாரத்தில் குறிப்பிட்ட அளவில் செயற்கை நுண்ணறிவுக்கான தேவை இருப்பதாகவும் இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக இருக்க நிறுவனம் விரும்புவதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்