ஆகஸ்ட் முதல் அனைத்து ‘என்டியு’ மாணவர்களுக்கும் ‘ஏஐ’ பாடங்கள் கட்டாயம்

ஆகஸ்ட் முதல் அனைத்து ‘என்டியு’ மாணவர்களுக்கும் ‘ஏஐ’ பாடங்கள் கட்டாயம்

2 mins read
4c82c3e9-be05-41ff-b401-55082229922f
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) முயற்சி, அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் (என்டியு) சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடங்கள் கட்டாயமாக்கப்படும்.

தற்போது, அந்தப் பாடங்கள் கணினித் துறையில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகின்றன. அதோடு, மாணவர்கள் பிரிமியம் கூகல் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை இலவசமாகப் பயன்படுத்தவும் முடியும்.

அவற்றில், வேலையிடத் தானியங்கி முறைகளுக்கு, ‘ஜெமினி என்டர்பிரைஸ்’, விரைவான செயலி முன்மாதிரிகளை உருவாக்குவதற்கு, ‘ஏஐ ஸ்டூடியோ’, பெரிய அளவிலான ‘ஏஐ’ முறைகளை நிர்வகிப்பதற்கு, ‘வர்டெக்ஸ் ஏஐ’ ஆகியவை அடங்கும்.

தனிப்பட்ட உதவியாளரை உருவாக்குவது முதல், ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வழங்க உதவும் ஓர் ஆராய்ச்சி உதவியாளரை உருவாக்குவதுவரை, அந்தக் கருவிகள் மாணவர்கள் எதையும் செய்வதற்கு வகைசெய்யும் என்று என்டியுவின் துணைத் தலைவர் பேராசிரியர் கிறிஸ்டியன் வுல்ஃப்ரம் கூறினார்.

“செயற்கை நுண்ணறிவு, கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும்,” என்றார் பேராசிரியர் வுல்ஃப்ரம்.

மாணவர்கள் பல்கலைக்கழகக் காலம் முழுவதும் தங்கள் செயற்கை நுண்ணறிவு முறைகளைத் தொடர்ந்து உருவாக்குவதற்காக, அவர்களுக்குக் கணினிப் பயன்பாட்டுப் புள்ளிகள் (Computing credits) வழங்கப்படும் என்றார் அவர். அவை, தனிப்பட்ட கற்றல், அறிவாற்றல் பகிர்வு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த முயற்சி, செயற்கை நுண்ணறிவை அனைத்துத் துறைகளிலும் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், புதிதாகக் கற்பவர்களும் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யலாம்.

“இது, அனைவரும் செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வதற்கான ஓர் அடித்தளம்,” என்று பேராசிரியர் வுல்ஃப்ரம் கூறினார்.

ஆனால், ‘ஏஐ’ பயன்பாட்டில் சில அபாயங்கள் இருப்பதால், தரவுப் பாதுகாப்பு முதல், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியம்வரை அனைத்தையும் பல்கலைக்கழகம் கவனமாக மதிப்பிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்