தற்காப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகளைத் தானியக்கமயமாக்கி முடிவெடுப்பதைத் துரிதப்படுத்தினாலும் செயல்பாடுகளில் மனிதர் இருக்கவேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் அவர் பேசினார்.
“செயற்கை நுண்ணறிவால் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். தகவல்களைப் புரிந்துகொள்ளுதல், குறிகளை அடையாளம் காணுதல், குறிகளுக்கான ஆயுத முறைகளைத் தேர்ந்தெடுத்தல் ஆகிய செயல்களை அது துரிதப்படுத்தும். இவை அனைத்தும் தானியக்கமயமாதலில் அங்கம் வகிக்கும்,” என்று முதன்முறையாக நடத்தப்பட்ட ‘எஸ்டி ஃபாரம்’ கலந்துரையாடலில் புதன்கிழமை (ஜூன் 24) அமைச்சர் குறிப்பிட்டார்.
மனிதர்களின் பங்கு
அதேவேளை, ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையிலும் மனிதர்கள் தொடர்ந்து அங்கம் வகிக்கவேண்டும் என்றும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான் சுட்டினார்.
தொழில்நுட்பத்தை அளவுக்கதிகமாக நம்பவேண்டாம் என்றும் திரு சான் எச்சரித்தார். புரியாத தொழில்நுட்பச் செயல்பாட்டு சூத்திரத்திடம் (algorithm) பொறுப்பை ‘ஒப்படைப்பதை’த் தவிர்க்க மனிதர்கள் ஈடுபடுத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உயர்தர சாதனங்களைப் பெறுவது முக்கியம் என்றாலும் அவை மட்டுமே வெற்றியைத் தேடித்தராது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் அணுகுமுறை
தேசிய சேவை, தற்காப்பு ஆகியவற்றின் தொடர்பில் பல அம்சங்கள் அலசப்பட்ட கலந்துரையாடலில் திரு சான் இக்கருத்துகளை வெளியிட்டார்.
பல்வேறு வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட 25 பேர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர்களில் பலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் வாசகர் கடிதம் பக்கத்துக்குக் கடிதங்களை அனுப்புபவர்கள்.
தொழில்நுட்பப் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவிலிருந்து தற்காப்புக்கான செலவு, அனைவரையும் உள்ளடக்குவது வரையிலான அம்சங்கள் கலந்துரையாடலில் அலசப்பட்டன.
அண்மைக் காலமாக உலகளவில் பூசல்கள் தொடர்வதையொட்டியும் சிங்கப்பூர் ஆயுதப் படை தினமான ஜூலை ஒன்றாம் தேதியை முன்னிட்டும் இந்த அம்சங்கள் குறித்துப் பேசப்பட்டன.
அதிநவீன அல்லது கவர்ச்சியான சாதனங்களை வாங்குவது சிங்கப்பூர் ஆயுதப் படையின் அணுகுமுறையாக இருந்ததில்லை என்றும் தனது மனிதவளத்துக்குக் கைகொடுக்கும் சாதனங்களில் முதலீடு செய்வதே அதன் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

