சிங்கப்பூர் நோயாளிகளுக்கும் மருத்துவ நடைமுறைகளுக்கும் ஏற்ற சுகாதாரப் பராமரிப்புச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரிகள் உருவாக்கப்படுகின்றன. தேசிய அளவிலான புதிய திட்டத்தின்கீழ் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
‘சிம்ஃபனி’ அதாவது சிங்கப்பூர் மருத்துவ அறநிறுவன ஏஐ மாதிரி என்று அத்திட்டம் வழங்கப்படுகிறது. ஏஐ பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் தரவுகளில் உள்ள இடைவெளியைக் குறைப்பதன் மூலம் மருத்துவப் பிரச்சினைகளை மருத்துவர்கள் இன்னும் சிறப்பாகக் கண்டறிய உதவுவது அதன் நோக்கம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், கண் கோளாறு போன்றவை அவற்றுள் அடங்கும். சிங்கப்பூரில் நடைபெறும் ‘என்சிஎஸ் இம்பெக்ட் 2026’ மாநாட்டில் திட்டம் பற்றிச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வியாழக்கிழமை (ஜூலை 9) அறிவித்தார்.
தற்போது சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ‘ஏஐ’ மாதிரிகள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களின் தரவுகளைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டவை. அதனால், சிங்கப்பூரின் மருத்துவச் சூழலில் அவற்றின் துல்லியமும் பொருத்தமும் குறையக்கூடும் என்பதே இப்போதைய முக்கியப் பிரச்சினையாக உள்ளது.
“சுருக்கமாகச் சொன்னால், அந்த ‘ஏஐ’ மாதிரிகள் நமது உள்ளூர் மருத்துவக் கல்லூரியில் சோதித்துப் பார்க்கப்படவில்லை. ஆனால், இந்த ‘சிம்ஃபனி’ நமது உள்ளூர் மருத்துவக் கல்லூரியில் பயன்படுத்தப்பட்டிருக்கும்,” என்று திரு ஓங் கூறினார்.
நோய்க்கான உத்தேசக் காரணங்கள், சிகிச்சை முறைகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை இந்த ‘ஏஐ’ மாதிரிகளால் பரிந்துரைக்க முடியும் என்றார் அவர். இருப்பினும், மருத்துவர்களின் முடிவே இறுதியானது என்று திரு ஓங் சொன்னார்.
மேலும், இந்த ஏஐ மாதிரிகள் தயாரானதும் அவை பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு முழுதும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று அவர் கூறினார். ஆயினும் அதற்கான காலக்கெடுவை அமைச்சர் ஓங் வெளியிடவில்லை.
‘சிம்ஃபனி’ திட்டத்திற்குச் சுகாதார அமைச்சின்கீழ் இயங்கும் தேசிய மருத்துவ ஆய்வு மன்ற (என்எம்ஆர்சி) அலுவலகமும் என்எம்ஆர்சி சிம்ஃபனி நிதியும் ஆதரவளிக்கின்றன. சிங்கப்பூர் மருத்துவ ஆய்வு, புத்தாக்கக் கூட்டமைப்பு திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
மருத்துவர்கள் மிகவும் துல்லியமான, பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்குச் சிங்கப்பூரின் மக்கள்தொகைக்கும் மருத்துவச் சூழலுக்கும் ஏற்ற தனித்துவமான ‘ஏஐ’ மாதிரிகள் உதவும் என்று கூட்டமைப்பு கூறியது.

