செயற்கை நுண்ணறிவு (ஏஐ), வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் பலன்கள் பரவலாகக் கிடைப்பதை உறுதிசெய்வதற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்தச் சிங்கப்பூரும் பின்லாந்தும் ஒப்புக்கொண்டுள்ளன. அத்துடன் வெளிப்படையான, பரந்துபட்ட, மீள்திறன் கொண்ட தொழில்நுட்பச் சூழலுக்கு ஆதரவளிக்கவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்தன.
ஏஐ, குவான்டம் தொழில்நுட்பம், மின்னிலக்க உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு தரப்பும் எண்ணியுள்ளன. ஆய்வு, புத்தாக்கம், தொழில்நுட்பம் முதலிய துறைகளில் தங்களின் தனித்துவமான ஆற்றலை இணைப்பதன் மூலம் அதனை எட்டுவது திட்டம். சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கெனவே சிங்கப்பூருக்கும் பின்லாந்துக்கும் இடையில் நடப்பில் உள்ள உடன்பாடுகளுக்கு அப்பால் புதிய ஒத்துழைப்பு அமையும். மருத்துவ ஆய்வு, சுகாதாரத் தொழில்நுட்பம், ஏஐ ஆகியவற்றை உள்ளடக்கிய 2026 இருதரப்பு சுகாதாரத் துறை ஒப்பந்தமும் அவற்றுள் அடங்கும்.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் அணுக்கமான பங்காளித்துவத்தை மறுஉறுதிப்படுத்தவும் தற்போதைய ஏஐ யுகத்தில் வெளியுறவுக் கொள்கை, ஒத்துழைப்புக்கான கூட்டு அணுகுமுறையை வகுக்கவும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் பின்லாந்து வெளியுறவு அமைச்சர் எலினா வால்டோனனும் சிங்கப்பூரில் சந்தித்ததைத் தொடர்ந்து அண்மை நடவடிக்கை வந்துள்ளது.
சிங்கப்பூரும் பின்லாந்தும் ஏஐ மாதிரிகள் தொடர்பான பணிகள் உட்பட வெளிப்படையான, புதுமையான ஆய்வுச் சூழலுக்கு ஆதரவளிக்கின்றன; மேலும் குவான்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகத் தொடர்புடைய தளங்களில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் அவை ஆராய்கின்றன.
“பொறுப்பான, மனிதனை மையமாகக் கொண்ட ‘ஏஐ’யைப் பொதுவான முன்னுரிமையாக அடையாளம் காணும் ‘ஐரோப்பிய ஒன்றியம்-சிங்கப்பூர் மின்னிலக்கப் பங்காளித்துவம்’, மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள், புத்தாக்கத்தில் பரந்துபட்ட ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை வழங்குகிறது. இந்த இருதரப்பு ஒத்துழைப்பு அதற்கு மேலும் வலுச் சேர்க்கிறது,” என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், அனைத்துத் தரப்புகளையும் உள்ளடக்கிய உரையாடல், விதிமுறைகளின் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்குநிலை ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்துலக ஏஐ ஆளுமையை வடிவமைப்பதற்கான ஒத்துழைப்பைச் சிங்கப்பூரும் பின்லாந்தும் மறுஉறுதிப்படுத்தின.
