சீரற்ற பேருந்து வருகையைச் சரிசெய்ய புதிய ‘ஏஐ’ தளம்

சீரற்ற பேருந்து வருகையைச் சரிசெய்ய புதிய ‘ஏஐ’ தளம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Sep 2026 - 7:24 pm

2 mins read

ஒரே சேவை எண்ணைக் கொண்ட பேருந்துகள் ஒன்றுக்கும் மேலானவை ஒரே நேரத்தில் பேருந்து நிறுத்தத்துக்கு வருவது போன்ற பிரச்சினைகளைக் கையாள உதவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளத்தை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.

ஃபுளோஓஎஸ் (FlowOS) என்றழைக்கப்படும் அத்தளம் தற்போது பேருந்துச் சேவைகள் 70, 145 ஆகியவற்றில் சோதனையிடப்பட்டு வருகிறது. வேறு ஏழு பேருந்துச் சேவைகளுக்கும் இத்தளம் சோதித்துப் பார்க்கப்படும். 2027 மார்ச்சில் சோதனைகள் நிறைவடையும்.

பிறகு 2027 இரண்டாம் காலாண்டில் எல்லா எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துச் சேவைகளுக்கும் இத்தளம் விரிவுபடுத்தப்படும்.

பல்வேறு நாள்களிலும் நேரங்களிலும் காணப்பட்ட போக்குகள் தொடர்பான தகவல்களை ஃபுலோஓஎஸ் ஒருங்கிணைக்கிறது. ஒரு பேருந்துச் சேவை அந்த நேரத்தில் எங்கிருக்கிறது போன்ற நேரடித் தகவல்களை இத்தளம் வழங்கும்.

பரிந்துரைகள்

ஒரே பேருந்துச் சேவை ஒன்றுக்குப் பின் மற்றொன்று அருகில் இருந்தால் அதுகுறித்து சேவையைக் கவனிக்கும் தரப்புக்குத் தெரியப்படுத்தப்படும். பிரச்சினையைச் சரிசெய்ய என்ன செய்யலாம் என்ற பரிந்துரைகளையும் தளம் முன்வைக்கும்.

சேவையைக் கவனிக்கும் தரப்பினர்தான் இறுதி முடிவை எடுப்பர். அவர்கள் ஃபுலோஓஎஸ் தரும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளலாம், மறுக்கலாம் அல்லது மாற்றியமைத்துக்கொள்ளலாம். பிறகு பேருந்து ஓட்டுநர்களிடம் தேவையான தகவல்களும் உத்தரவுகளும் அளிக்கப்படும்.

மேலும் ஆக்ககரமாகச் செயல்படுவது இலக்கு

பிரச்சினைகள் எழும்போது கூடுதல் தகவல்களுடன் நல்ல முடிவுகளை எடுக்கவும் மேலும் ஆக்ககரமான முறையில் பதில் நடவடிக்கை எடுக்கவும் உதவுவது புதிய தளத்தின் இலக்கு என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி சிம் கூறினார்.

“சரியான நேர இடைவெளியில் பேருந்துச் சேவைகளை இயங்கச் செய்வது என்பது பேருந்துச் சேவை செயல்முறைகளின் ஆகச் சிக்கலான அம்சங்களில் ஒன்றாகும். குறிப்பாக, சாலைகளில் நிலவரம் அடிக்கடி மாறக்கூடிய, கணிக்க முடியாத நிலையில் இருக்கும்போது இது பொருந்தும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஃபுலோஓஎஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதைச் செய்தியாளர்கள் இயோ சூ காங்கில் உள்ள சிலேத்தார் பேருந்து முனையத்துக்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 24) நேரில் சென்று பார்த்து அறிந்தனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பேருந்துஏஐசெயற்கை நுண்ணறிவுசேவைநேரம்எஸ்பிஎஸ் டிரான்சிட்