செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு விதிமுறைகளையும் தரநிலைகளையும் வகுக்கக்கூடிய அமைப்புகளை உருவாக்குவது மட்டுமே உதவும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவும் சீனாவும் ஏஐ துறையில் அதிக முனைப்புக் காட்டிவரும் வேளையில், அதன் வளர்ச்சியை நிறுத்துமாறு கோருவது இனி சாத்தியமில்லை என்றார் அவர். நியூயார்க்கில் ஐக்கிய நாட்டுப் (ஐநா) பொதுச் சபைக் கூட்டத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 26) டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பேசினார்.
“புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, புதிய விதிமுறைகளை நாம் கூட்டாக உருவாக்க வேண்டும்; தேவைப்பட்டால் புதிய அமைப்புகளை உருவாக்கவும் தயாராக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.
ஐநா பொதுச் சபை விவாதத்தில் சிங்கப்பூரின் தேசிய அறிக்கையை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.
“ஏஐ பாதுகாப்பு தொடர்பான ஐநா கட்டமைப்பு உடன்படிக்கை உள்ளிட்ட அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் நாம் பரிசீலிக்க வேண்டும்,” என்று அவர் சொன்னார்.
அமைச்சர், தமது 20 நிமிட உரையில், உலக அளவில் கடுமையான அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்குப் பலதரப்பு உறவுகளை புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றம் குறித்து ஐநா ஏற்றுக்கொண்ட உடன்படிக்கையைப் போல, இத்தகைய கட்டமைப்பானது அடிப்படைத் கொள்கைகள், கூட்டமைப்புகளை நிறுவி, அனைத்துலக நடவடிக்கைகளுக்கான சட்டபூர்வ அமைப்பாகச் செயல்படக்கூடும்.
துருக்கிய அதிபர் ரிசெப் எர்துவானும் இதே போன்ற கோரிக்கையை முன்வைத்து, ஏஐ தொழில்நுட்பத்திற்குப் பொதுவான அனைத்துலகச் சட்டக் கட்டமைப்பு தேவை என்பதைத் தமது உரையில் வலியுறுத்தினார்.
ஏஐ தொழில்நுட்பங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக வளர்ந்து வருவதாகத் தொழில்நுட்பத் தலைவர்கள், பாதுகாப்பு ஆய்வாளர்கள், அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய அமைப்புகளின் தேவை அவசியமாகிறது என்று அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
உலகளாவிய தொலைத்தொடர்பு, மின்னிலக்கக் கட்டமைப்புகளை நிர்வகிக்கும் அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம், அணுசக்தித் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான பயன்பாட்டைக் கண்காணிக்கும் அனைத்துலக அணுசக்தி அமைப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிட்டார்.
“தற்போது தொழில்நுட்பத் தரநிலைகளை வகுக்கும் அமைப்புகளைப் போல, ஏஐ துறைக்கும் அனைத்துலக அமைப்பு ஒன்று தேவைப்படலாம்,” என்றார் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.
