பொருளியல் வளர்ச்சியை வலுப்படுத்த ‘ஏஐ’யில் முன்னிலை வகிக்க வேண்டும்: ஜெஃப்ரி சியாவ்

2 mins read
9a9efac4-46eb-4b9d-9e3c-29281c43488d
நவம்பர் 19ஆம் தேதி, செய்தியாளர்களிடம் பேசிய தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த பத்தாண்டுகளில் தனது பொருளியல் வளர்ச்சியை வலுப்படுத்த, செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) உள்ள முதலீட்டுப் புழக்கங்களைக் கைப்பற்றுவதற்கான வழியைச் சிங்கப்பூர் கண்டறிய வேண்டும் எனத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சரும் நிதித்துறை மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் கூறினார்.

அரசாங்கத்தின் பொருளியல் உத்திபூர்வ மறுஆய்வு (இஎஸ்ஆர்) குறித்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் வருடாந்தர விவாதத்தின்போது ‘இஎஸ்ஆர்’ குறித்து இடைக்காலப் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதை இந்த மதிப்பாய்வின்கீழ் உள்ள ஐந்து குழுக்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பரிந்துரைகளுடன் இறுதி அறிக்கையை ‘இஎஸ்ஆர்’ வெளியிடும்.

சிங்கப்பூர்த் தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் 70க்கும் மேற்பட்ட வர்த்தகத் தலைவர்களுடன் மூன்று ‘இஎஸ்ஆர்’ குழுக்கள் பங்கேற்றன.

புதன்கிழமை (நவம்பர் 19) நடந்த அந்த அமர்வில் செய்தியாளர்களுடன் பேசிய திரு சியாவ் இவ்வாறு தெரிவித்தார்.

“அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டு காலப் பொருளியலுக்கு ‘ஏஐ’ ஒரு அடிப்படை உந்து சக்தியாக இருக்கும் என்பது இப்போது மிகவும் தெளிவாகியுள்ளது. உலகளாவிய ‘ஏஐ’ புத்தாக்கங்களில் சிங்கப்பூர் முன்னணியில் இருக்க வாய்ப்புகள் உள்ளன,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுக்கான மையங்களை நிறுவனங்கள் அமைத்து வருவதால், தேசிய ‘ஏஐ’ உத்தியைக் கொண்டிருப்பதற்கான பலன்களை நாடு பெறத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், ஆராய்ச்சி, மேம்பாடு தொடங்கி திறமை ஈர்ப்பு வரை அனைத்து ‘ஏஐ’ முயற்சிகளுக்கும் கூடுதல் ஒருங்கிணைப்பு தேவை என்பதையும் திரு சியாவ் வலியுறுத்தினார்.

“இந்த ஓட்டங்களுக்கு மத்தியில் நடுவமாக இருப்பது எளிதன்று. ஏனென்றால், நாம் மனித வளத்தில் கட்டுப்படுத்தப்படுகிறோம். தரவு மையங்களுக்கு எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் புதிய வடிவங்கள் தேவை. நாம் பின்தங்கியிருந்தாலும் இந்தத் தடைகளில் சிலவற்றை எவ்வாறு பலமாக மாற்றுவது என்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது,” என்றார் அமைச்சர் சியாவ்.

குறிப்புச் சொற்கள்