பருவநிலை மற்றும் சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுடபத்துடனான புதிய மீத்திறன் கணினிகளை (சூப்பர்கம்ப்யூட்டர்) சிங்கப்பூர் தொடங்கி உள்ளது.
அதன் மூலம் வானிலை முன்னுரைப்பு, நோய்க் கணிப்பு மற்றும் ஆசிய மொழிகளின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய உரையாடல் செயலிகள் குறித்த ஆராய்ச்சிகள் கணிசமான அளவில் ஊக்கத்தைப் பெற்றுள்ளன.
‘ஆஸ்பைர் 2பி’ என்று அழைக்கப்படும் அந்த மீத்திறன் கணினிகள் அமெரிக்க நுண்சில்லு தயாரிப்பாளரான என்விடியாவின் (NVIDIA) நவீன கிராஃபிக்ஸ் செயலாக்க அம்சங்களின் ஆக அண்மையத் தொகுப்புகளைப் பெற்றிருக்கும்
இது, 120,000 உயர்தர செயற்கை நுண்ணறிவு மடிக்கணினிகளின் ஒருங்கிணைந்த கணினி ஆற்றலைவிட அதிக கணினி ஆற்றலைக் கொண்டிருக்க அனுமதிக்கிறது.
சிங்கப்பூரின் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த 9,000க்கும் மேற்பட்ட அரசாங்க ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தப் புதிய கணினியின் மகத்தான ஆற்றல் உதவியாக இருக்கும்.
ஆராய்ச்சியாளர்களின் பரிசோதனைகளுக்குத் தேவைப்படும் நேரத்தைக் குறைக்கவும் சிக்கலான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கவும் அது கைகொடுக்கும்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை ( ஜூன் 8) நடைபெற்ற மீத்திறன் கணினிகள் தொடக்க நிகழ்வில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பங்கேற்று உரையாற்றினார்.
“பணிப்பாய்வுகளை மறுவடிவமைக்கவும் திருப்புமுனையான கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை விரைவுபடுத்தவும், நமது ஆராய்ச்சியாளர்களுக்கான பன்முகப் பெருக்கியாக செயற்கை நுண்ணறிவு விளங்குவதைக் காண்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“ஆஸ்பைர் 2பி மீத்திறன் கணினி மூலம், முன்பு மிகவும் பெரியதாக இருந்த செயல்பாட்டு மாதிரிகளை இப்போது சிங்கப்பூரிலேயே நமது குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பயிற்றுவிக்க முடியும்.
“வெளிநாடுகளுக்கு அனுப்பிப் பெறவேண்டியிருந்த பணிகளுக்கு தற்போது நமது தேசிய ஆராய்ச்சி உள்கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்றும் திருவாட்டி டியோ தமது உரையில் குறிப்பிட்டார்.
மீத்திறன் கணினி என்பது வழக்கமான கணினிகளைவிட பன்மடங்கு அதிவேகமாக இயங்கக்கூடியது. அத்துடன், பல்வேறு சிக்கலான கணிதச் செயல்பாடுகளை ஒரே நொடியில் செய்யக்கூடிய மிக சக்திவாய்ந்த கணினியாகவும் அது உள்ளது.
புயல், மழை மற்றும் பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்கும் வல்லமை பெற்றது அது.

