‘ஏஐ’ தொழில்நுட்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: மூத்த அமைச்சர் சண்முகம்

‘ஏஐ’ தொழில்நுட்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: மூத்த அமைச்சர் சண்முகம்

2 mins read
f29cd46f-f727-4cfe-a7c1-a658953ef03e
(வலமிருந்து) ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று, காவல்துறை ஆணையர் ஹாவ் குவாங் ஹுவீ , மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம் இருவரும், சிங்கப்பூர் காவல்துறை உபகாரச் சம்பளம் பெற்றவர்களான சார்லீன் டான், ரெய்னென் ங்கோ ஆகியோரிடம் உரையாடுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் இணையச் சூழலில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ந்துவரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

இதனைக் கையாள ‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் திறன்களை நாம் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மூத்த அமைச்சர் கா.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

“செயற்கை நுண்ணறிவு பல்வேறு வழிகளில் அச்சுறுத்தல்களுக்கு ஈடுகொடுக்கிறது,” என்றார் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு சண்முகம்.

எடுத்துக்காட்டாக, 2024ஆம் ஆண்டில் ‘ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்புக்குப் பற்றுறுதியையும் தாக்குதல் அறிக்கையையும் உருவாக்குவதற்காகச் செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்திய 17 வயது இளையர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இவ்வாண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரின் வெளிநாட்டுக் கொள்கை, பொருளியல், தலைமைத்துவம் குறித்துச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சீன மொழியில் நூற்றுக்கணக்கான போலிக் காணொளிகள் பிரதமர் லாரன்ஸ் வோங்கைக் குறிவைத்து வெளியிடப்பட்டதையும் மூத்த அமைச்சர் சுட்டினார்.

“தீங்கிழைக்கும் நோக்கத்துடன் நமக்கு எதிராகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முடியும் என்பதை இவை அனைத்தும் காட்டுகின்றன,” என்றார் அவர்.

எனவே, அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறியவும் அதிகாரிகளை மேலும் திறம்படச் செயல்பட வைக்கவும் மனிதப் பகுத்தறிவு தேவைப்படும் பணிகளைச் செய்வதற்கு நமது மக்களுக்கு நேரத்தை ஒதுக்கவும் உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவில் செயற்கை நுண்ணறிவும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று திரு சண்முகம் சொன்னார்.

வீடு புகுந்து திருடுதல், பாலியல் குற்றங்கள், கொலை போன்ற உடல்ரீதியான அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் சிங்கப்பூர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக இணையவழிக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறினார்.

“மோசடிகளுக்கு எதிரான நமது போராட்டத்தில் கடுமையான சட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றன,” என்றார் மூத்த அமைச்சர்.

சிங்கப்பூர்க் காவல்துறை, உள்துறை அமைச்சின் உபகாரச்சம்பள விருது நிகழ்ச்சியில் திரு சண்முகம் பேசினார்.

மரினா பே சேண்ட்சில் உள்ள சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற நிகழ்ச்சியில் 40 மாணவர்கள் காவல்துறை, உள்துறை அமைச்சின் உபகாரச்சம்பள விருதுகளைப் பெற்றனர்.

அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த திரு சண்முகம், வருங்காலத்தில் சவால்கள் இருக்கும் என்பதையும் குறிப்பிட்டார்.

“சவால்கள் இருந்தாலும் வலுவான அரசாங்க நிர்வாகம், தொழில்நுட்பத்தின் பொறுப்பான பயன்பாடு, சரியானவர்கள் மீதான தொடர்-முதலீடு ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூரை நாம் பாதுகாப்பாக வைத்திருப்போம்,” என்று மூத்த அமைச்சர் சண்முகம் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்
உள்துறை அமைச்சுமூத்த அமைச்சர்கா சண்முகம்செயற்கை நுண்ணறிவுஅச்சுறுத்தல்