சிங்கப்பூரின் பாண்டான் நீர்த்தேக்கத்தில் முதலை இருப்பதைக் காட்டும் படத்தின் உண்மைத்தன்மையைச் சரிவர உறுதிசெய்ய முடியாததால் தேசிய நீர் அமைப்பான பியுபி அனைத்து நீர் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி முதலையைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது.
ஆகஸ்ட் 20ஆம் தேதி, பாண்டான் நீர்த்தேக்கத்தில் முதலை இருப்பதைக் காட்டும் படம் குறித்து பியுபி அறிந்தது. அதையடுத்து, பல்வேறு செய்ற்கை நுண்ணறிவு இணையக் கருவிகள் மூலம் படத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அது முற்பட்டபோது உறுதியான எந்த முடிவும் கிடைக்கவில்லை.
“எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, துரிதமாகச் செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்,” என்று பியுபி குறிப்பிட்டது.
பியுபியும் தேசியப் பூங்காக் கழகமும் இணைந்து முதலையைத் தேடிப் பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக முன்னர் தெரிவித்தன. பொதுமக்களை எச்சரிக்கும் அறிவிப்புகளும் சம்பந்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் படகு வலிப்புச் சங்கம், சிங்கப்பூர் கெனூ சம்மேளனம் ஆகியவையும் அனைத்து நீர் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தும்படி அறிவுறுத்தின.
ஆகஸ்ட் 21ஆம் தேதி, முதலைக் கொண்டு பரவிய படம் போலி என்றும் நீர் நடவடிக்கைகள்மீதான தற்காலிக நிறுத்தம் மீட்கப்பட்டது என்றும் பியுபி சொன்னது.
அதுதொடர்பில் அமைப்பு, காவல்துறையிடமும் புகார் அளித்தது.
வியாழக்கிழமை (அக்டோபர் 1) வெளியிட்ட பதிவில், சம்பவம் தொடர்பாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஆடவர், அதன் நீர்த்தேக்கப் பராமரிப்பு ஒப்பந்ததாரரால் பணியமர்த்தப்பட்ட ஓர் ஊழியர் என்று குறிப்பிட்டது.
அந்தப் படம் குறித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி அந்த ஊழியரின் மேற்பார்வையாளர் பியுபிக்குத் தகவல் அளித்தார்.
மியன்மாரைச் சேர்ந்த 30 வயது யே லின்மீது சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டது. பொய்யான தகவலைப் பரப்பியதற்காக ஒரு குற்றச்சாட்டையும், நீதிக்கு இடையூறாக இருந்ததற்காக மற்றோரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்கொள்கிறார்.
செப்டம்பர் 29ஆம் தேதி, குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகவும் வழக்கறிஞர் எவரையும் வாதாட வைக்கப்போவதில்லை என்றும் யே கூறினார். அவரின் வழக்கு நவம்பரில் மீண்டும் விசாரிக்கப்படும்.
