செங்காங்கில் உள்ள எம். ஒய் வோர்ல்டு@ரிவெர்வேல் ஷோர்ஸ் என்ற பாலர் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட புதிய கருவி பணிச் சுமையைக் குறைக்க கைகொடுத்துவருகிறது.
ஏறக்குறைய 60 ஊழியர்களைக் கவனித்துக்கொள்கிறார் எம். ஒய். வோர்ல்டு பாலர் பள்ளி முதல்வர் ஜோயி லிம்.
எந்தக் கல்வியாளர்கள் எந்த வகுப்பிற்குச் செல்லவேண்டும், எத்தனை மணி நேரம் அவர்கள் வகுப்புகள் எடுக்கவேண்டும் என்பதை முடிவுசெய்ய ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஆறு மணி நேரத்தை அவர் செலவிட வேண்டியிருந்தது.
தற்போது அந்த நேரத்தைக் கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கிறது புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவி. எம். ஒய். வோர்ல்டு பாலர் பள்ளி அந்தக் கருவி குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் கோ பெய் மிங்கிற்குச் செயல்முறை விளக்கம் அளித்தது.
அவர், திங்கட்கிழமை (நவம்பர் 23) அங்குச் சென்றிருந்தார்.
பாலர் பள்ளிகள் தங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு உதவும் வகையில், $2 மில்லியன் மதிப்பிலான பாலர் பருவப் புத்தாக்கச் சோதனைத் திட்டத்தின்கீழ் ஆதரிக்கப்படும் 14 திட்டங்களில் அந்தச் செயற்கை நுண்ணறிவுக் கருவியும் ஒன்று.
அதன் மூலம், பாலர் பள்ளித் துறைக்குப் பரவலாகப் பயனளிக்கக்கூடிய தீர்வுகளை உருவாக்கவும், சோதிக்கவும், மேம்படுத்தவும் முடியும்.
மே மாதம் நடைபெற்ற திட்டத்தின் முதலாவது மானிய விண்ணப்பத்திற்கு பாடத்திட்டமிடல், மாணவர்களின் செயல்திறன் தொகுப்புகளை உருவாக்குதல் போன்ற பாலர் பள்ளிச் செயல்பாடுகளின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய 60க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது.
பொருத்தம், விரிவாக்கக்கூடிய தன்மை மற்றும் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த 14 திட்டங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
“செயல்பாட்டுச் சவால்களைக் களைந்து, கல்வியாளர்களின் நிர்வாகப் பணிச்சுமையைக் குறைப்பதே தீர்வுகளின் நோக்கம். அதன் மூலம், குழந்தைகளின் கற்றல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதிலும் குழந்தைகளின் ஆரம்பகால ஆண்டுகளில் குடும்பங்களுடன் இணைந்து செயல்படுவதிலும் அவர்களால் அதிகக் கவனம் செலுத்த முடியும்,” என்று அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
