சிங்கப்பூரில் உள்ள தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த மூன்று கட்டாயப் பயிற்சிப் பாடத் தொகுதிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வகுப்பறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், ஆசிரியர்களுக்குத் தேவையான திறன்களையும் அறிவையும் வழங்கும் நோக்கில் ‘ஆசிரியர் ஏஐ திறன் தொழில்முறை கற்றல் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயிற்சியின் விவரங்கள்:
முதல் பாடத் தொகுதி: ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படை, அதன் பாதுகாப்பான பொறுப்பான பயன்பாடு, அறநெறிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதனை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆசிரியர்கள் முடித்துவிட வேண்டும்.
அடுத்த இரண்டு பாடத் தொகுதிகள்: மாணவர்களின் வயதுக்கேற்ப ஏஐயைப் பயன்படுத்துதல், மாணவர்களின் சிந்தனைத் திறனில் ஏஐ ஏற்படுத்தும் தாக்கம் கற்றலை மேலும் ஆழமாக்குவது. இதனை விளக்கும் பாடங்களை 2027க்குள் முடிக்க வேண்டும்.
கற்றல் முறை:
இணையம் வழியாகக் கற்றுக்கொள்ளக்கூடிய இந்த ஒவ்வொரு பாடத் தொகுதியை முடிக்கவும் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் ஆகும்.
மேலும், 2027 முதல் ஆசிரியர்கள் தங்களின் பாடப் பிரிவுகளுக்கு ஏற்ற உயர்நிலை ஏஐ பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ள வழிகாட்டப்படும்.
எதற்காக இந்த நடவடிக்கை?
மாணவர்கள் தங்களின் வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும் ஏஐ தொழில்நுட்பத்தையே முழுமையாகச் சார்ந்திருந்து, சொந்தமாகச் சிந்திக்கும் திறனைக் கோட்டை விட்டுவிடக் கூடாது என்ற கவலை கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மாணவர்களின் கற்றலில் ஏஐ ஏற்படுத்தும் தாக்கங்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.
தொடக்கப் பள்ளி 4 முதல் ஆசிரியர்களின் நேரடி மேற்பார்வையில், ‘சிங்கப்பூர் மாணவர் கற்றல் தளத்தின்’ மூலம் தகுந்த வழிகாட்டுதல்களோடு ஏஐ படிப்படியாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
இது குறித்துப் பேசிய கல்வி அமைச்சின் கல்வித் தொழில்நுட்பப் பிரிவின் தலைமை வல்லுநர் சாமுவேல் டான், “2022ல் ’சாட்ஜிபிடி’ போன்ற ஏஐ கருவிகள் பிரபலமடைந்தது முதலே பல ஆசிரியர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‘‘எனவே, ஆசிரியர்களுக்குத் தேவையான ஏஐ திறன்களை முறைப்படி வழங்கவே இந்த வழிகாட்டுதல் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது,” என்றார்.
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவில் ஏஐ தொழில்நுட்பம் பரிச்சயம் கொண்டிருப்பதால், இத்தகைய கட்டாயப் பயிற்சிகள் வழி சக ஆசிரியர்களுடன் இணைந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருவதாகச் சிங்கப்பூர் ஆசிரியர்கள் கழகம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், அனைத்துப் பாடவேளைகளிலும் ஏஐயைப் பயன்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல என்றும், தேவைக்கேற்ப சரியான முறையில் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் இலக்கு என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.


