பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வரவு செலவுத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) முக்கியத்துவத்தை பல்வேறு கட்டங்களில் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கு ஏற்ப, மறுநாளே தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், புதிய ஏஐ பயிற்சிக்கான முயற்சிகள் அடுத்தடுத்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று அறிவித்துள்ளது.
சிங்கப்பூரர்களுக்கு செயற்கை நுண்ணறிவுக்கான பயிற்சிப் பாதைகளை வகுப்பது, செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் கட்டணங்களுக்கு நிதியுதவி வழங்குவது புதிய முயற்சிகளில் உள்ளடங்கும்.
இதில் முக்கியமாக பயிற்சிப் பாதைகள், ஏஐ கருவிக்கான நிதி உதவியோடு இணைக்கப்பட்டிருக்கும்.
இதனால் ஏஐ பயிற்சிகளைப் பெறும்போதே அவற்றை பயன்படுத்துவதற்கான நிதியையும் ஊழியர்கள் பெறவிருக்கின்றனர்.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளரான இங் சீ மெங், ‘ஏஐ தயார்நிலை எஸ்ஜி’ எனும் முயற்சியை என்டியுசி வேலை வாய்ப்புக் கண்காட்சியில் அறிவித்தார் என்று சேனல்நியூஸ்ஏஷியா தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் 70க்கும் மேற்பட்ட முதலாளிகள் 5,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை முன் வைத்திருந்தனர். இரண்டு நாள் கண்காட்சி சனிக்கிழமை வரை சேண்ட்ஸ் எக்ஸ்போ, கண்காட்சி நிலையத்தில் நடைபெறுகிறது.
“எங்கள் தொழிலாளர்களுடன் சேர்ந்து பயணிக்கவும், அவர்களுடைய வேலை மாற்றங்களுக்கு உரிய ஆதரவுகளை வழங்கவும் எதிர்கால ஏஐ உலகில் ஊழியர்கள் நியாயமான இடத்தைப் பெறவும் நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். அதையொட்டி ‘என்டியுசி ஏஐ-தயார்நிலை எஸ்ஜி’ தொடங்கப்படுகிறது,” என்று திரு இங் சீ மெங் அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இம்முயற்சியில், அனைத்து அம்சங்களும் ஒரே இடத்தில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
“ஏஐ திறன்களுக்கு ஊழியர்களை தயார்ப்படுத்துவது, ஏஐ தொழில்நுட்பத்திற்கான மாற்றங்களை நிறுவனங்கள் செய்ய உதவி, வேலை மறுவடிமைப்பு, ஊழியர் திறன்களுக்கு ஏற்ப பொருத்தமான வேலையைத் தேடித் தருவது உள்ளிட்டவை ஒரேயிட முயற்சியில் இருக்கும்,” என்று திரு இங் விவரித்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஊழியர்கள், நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை தொழிற்சங்கத் தலைவர் ஒப்புக் கொண்டார்.
என்டியுசி மேற்கொண்ட ஆய்வில் வேலைப் பாதுகாப்பே முக்கிய கவலையாக இருப்பதாக ஐந்து ஊழியர்களில் ஒருவர் கூறியிருந்தார்.
2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் 2,000 ஊழியர்கள் பங்கேற்றனர்.
நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரும் தங்களுடைய வேலைகளில் ஏஐ ஏற்படுத்தும் தாக்கத்தைக் கண்டு அதிகம் கவலை கொள்கின்றனர்.
அதே சமயத்தில் பல நிறுவனங்கள், குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் புகுத்திக் கொள்ள விரும்புகின்றன. ஆனால் அதனால் ஏற்படும் செலவுகளும், அத்தகைய ஆற்றலைப் பெறுவதற்குள்ள கட்டுப்பாடுகளும் நிறுவனங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருப்பதை திரு இங் சீ மெங் சுட்டிக்காட்டினார்.

