சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு அதிகரிப்பு

மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சி

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு அதிகரிப்பு

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
வரைகலை: ஹஃபிஸா ஐனி

05 Oct 2026 - 6:07 pm

2 mins read

சிங்கப்பூரில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாட்டின் மின்னிலக்கப் பொருளியல் $144 பில்லியனுக்கும் மேல் உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது பெரும்பங்கு வகிக்கிறது.

2025ஆம் ஆண்டில் இங்குள்ள நிறுவனங்களில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமானவை இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் அறிக்கையின் அண்மைப் புள்ளிவிவரங்களின்படி, அதற்கு ஏற்றாற்போல், தொழில்நுட்ப வேலைவாய்ப்பு கூடியுள்ளது. 2024ல் 214,000ஆக இருந்த அது 2025ல் ஆண்டு அடிப்படையில் 3.8 விழுக்காடு உயர்ந்து 222,200 ஆகியுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தரவு, இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிவேக வளர்ச்சி காணப்படுகிறது.

தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், திங்கட்கிழமை (அக்டோபர் 5) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் ஏஐ பயன்பாடு அதிகரித்திருப்பதையும் அது காட்டியது. 2024ல் 14.7 விழுக்காடாக இருந்த அது, 2025ல் 23.5 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளதாக அறிக்கை சுட்டியது.

குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடையே ஏஐ பயன்பாடு 14.5 விழுக்காட்டிலிருந்து 23.4 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது. அதே நேரம் பெரிய நிறுவனங்களிடையே பயன்பாடு இதே காலத்தில் 62.5 விழுக்காட்டிலிருந்து 70.4 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியல் 2024ல் $136.5 பில்லியனில் இருந்து 2025ல் $144.1 பில்லியனாக வளர்ச்சி அடைந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு ஆண்டு அடிப்படையில் 18.8 விழுக்காட்டிலிருந்து 19.3 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது.

மின்னிலக்கப் பொருளியலின் இந்த நிலையான வளர்ச்சி, “பல்வேறு தொழில்துறைகளில் உள்ள அனைத்து நிறுவனங்களும் எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் ஊழியர்கள் எவ்வாறு தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள் என்பதையும் மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து மறுவடிவமைக்கப்படுவதைப் பிரதிபலிக்கிறது” என்று ஆணையம் தெரிவித்தது.

ஊழியர்களிடையே ஏஐ பயன்பாடு

ஊழியர்களும் ஏஐ மூலம் பலன்களைப் பெறுவதாகக் கூறுகின்றனர். 2026ல் பணியிடத்தில் கிட்டத்தட்ட 86 விழுக்காட்டு ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக ஆணையம் கூறியது. சென்ற ஆண்டு அது 78 விழுக்காடாக இருந்தது.

வேலையிடத்தில் வலுவான ஏஐ பயன்பாடு இருந்தபோதிலும் இன்னும் இடைவெளி இருப்பதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்பதை 68 விழுக்காட்டு ஊழியர்கள் உணர்ந்தாலும் 37 விழுக்காட்டு ஊழியர்கள் மட்டுமே கடந்த 12 மாதங்களில் ஏஐ தொடர்பான பயிற்சிகளுக்குச் சென்றுள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, தொழில்முறை மற்றும் தொழில்முறை அல்லாத ஊழியர்களிடையே ஏஐ திறன்களை வலுப்படுத்த, ஆணையம் அதன் ‘தேசிய ஏஐ தாக்கம்’ எனும் திட்டத்தை விரிவுபடுத்துகிறது. ஒட்டுமொத்தமாக 140,000 ஊழியர்களின் திறன்களை 2029க்குள் உயர்த்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஏஐசெயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம்மின்னிலக்கம்பொருளியல்