சிங்கப்பூர் வங்கிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், தனியார் வங்கிச் சேவை வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கு விண்ணப்பங்கள் விரைவாகச் செயல்படுத்தப்படுவதை இனி எதிர்பார்க்கலாம்.
வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் ‘சாட்பாட்’ (chatbot) சேவைகளைத் தாண்டி, விதிகளுக்கு இணங்குதல், வாடிக்கையாளரைப் பற்றி அறிந்துகொள்ளுதல் போன்ற நேரடித் தொடர்பு அல்லாத பணிகளுக்காக இப்போது வங்கிகள் அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
அதன் மூலம், புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் நடைமுறை தானியக்கமாக்கப்பட்டு விரைவுபடுத்தப்படுகிறது.
ஓசிபிசி வங்கி தனது புதிய ‘ஹீலியோஸ்’ (HELIOS) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளத்தின் மூலம், தனியார் வங்கிக் கணக்குகளை 15 வேலை நாள்களில் திறக்கமுடியும் என்று ஜூலை 29ஆம் தேதி அறிவித்தது. முன்னதாக, அதற்கு 30 வேலை நாள்கள் எடுக்கும்.
அதோடு, கடுமையான இடர் மேலாண்மையும் விதிமுறைத் தரங்களும் கடைப்பிடிக்கப்படும் என்றும் அது கூறியது.
அந்த 15 நாள்கள் என்பது அனைத்து வாடிக்கையாளர்களுக்குமான சராசரி அளவாகும். அதாவது, ஓசிபிசி வங்கியின் புதிய தனியார் வங்கிக் கணக்குகளில் பாதியளவு, அந்தக் காலகட்டத்திற்குள்ளோ அதைவிடக் குறைவான நேரத்திலோ திறக்கப்பட்டுவிடும். ஆனால், சிக்கலான மற்ற விண்ணப்பங்களுக்குக் கூடுதல் காலம் எடுக்கும்.
சிக்கல் இல்லாத கணக்குகளை ஒரே நாளில்கூட திறக்கமுடியும் என்று ஓசிபிசி குழுமத்தின் சட்ட, விதிமுறை இணக்கப் பிரிவின் தலைவர் லொரேட்டா யுவென் தெரிவித்தார்.
அந்த நேரக் குறைப்பு, புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கான வங்கித் துறையின் முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.
சிக்கலான விண்ணப்பங்களுக்குத் தற்போது சராசரியாகக் கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் அல்லது அதற்கும் மேல் எடுக்கும். இவ்வாண்டின் இறுதிக்குள் தனியார் வங்கிக் கணக்கைத் திறக்கும் நேரத்தை ஒரு மாதத்திற்குள் குறைக்க, சிங்கப்பூர் நாணய ஆணையம், தனியார் வங்கித் துறைக் குழுமத்துடன் இணைந்துப் பணியாற்றி வருகிறது.

