சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மலேசியாவுக்கான பயணக் கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளன. மலேசியா செல்லும் விமானங்களுக்கும் பேருந்துகளுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 14ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை ஈப்போவுக்குச் செல்ல பொருளியல் வகுப்பு பயணச்சீட்டுகளுக்கான கட்டணம் $822லிருந்து $1,222 வரை உள்ளது. அதற்கு முந்தைய வாரத்திற்கான கட்டணம் $124லிருந்து $191 வரை உள்ளது.
சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்றுவருவதற்கான பயணச்சீட்டுக் கட்டணம் $420லிருந்து $1,245 வரை உள்ளது. அதற்கு முந்தைய வாரம் அதாவது பிப்ரவரி 7ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதிவரை பயணச்சீட்டுக் கட்டணம் $99லிருந்து $345 வரை உள்ளது.
அதிகரிக்கும் விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ள தேவையைக் குறிப்பதாக ஏர்ஏஷியா நிறுவனம் குறிப்பிட்டது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகியவை சீனப் புத்தாண்டு காலகட்டத்தில் பயண முன்பதிவுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் குறிப்பிட்டது.
பேருந்துச் சேவைகளுக்கான தேவையும் சீனப் புத்தாண்டின்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
பிப்ரவரி 14ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதிவரை கோலாலம்பூருக்குச் சென்றுவருவதற்கான பேருந்துக் கட்டணங்கள் $89லிருந்து $279ஆக உள்ளன. அதற்கு முந்தைய வாரத்தில் அது $51லிருந்து $153ஆக உள்ளது.
மலேசியப் பேருந்து நிறுவனமான காஸ்வே லிங், புத்தாண்டு காலத்தில் அளவுக்கு அதிகமான கூட்டத்தை எதிர்பார்ப்பதாகச் சொன்னது. நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து சூழலுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளைத் தயார்நிலையில் வைத்திருப்பதாக அது சொன்னது.

