ஆசிய பசிபிக் விமான நிலையங்களில் பயணிகள் கட்டணம் அதிகரிக்கலாம்

2 mins read
ff0b7667-89fd-4ebc-988e-377dfd96b735
விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு, சேவை சார்ந்த செலவுகள் அதிகரிப்பதால் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசிய பசிபிக் விமான நிலையங்களில் விமானப் பயணிகளிடம் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று அனைத்துலக விமான நிலைய மன்றத்தின் ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு இயக்குநர் ஸ்டெபானோ பாரோன்கி தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விமான நிலைய மன்றத்தின் கவனிப்பில் ஆசியா, மத்திய கிழக்கு வட்டாரத்தில் மட்டும் 600க்கும் அதிகமான விமான நிலையங்கள் உள்ளன.

“அடுத்த 20 ஆண்டுகளில் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு, சேவை சார்ந்த செலவுகள் அதிகரிக்கும்.

“அதை ஈடுகட்ட விமானப் பயணிகளிடமும் விமான நிறுவனங்களிடமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்,” என்று அவர் தெரிவித்தார். சாங்கி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போது பாரோன்கி இதைக் கூறினார்.

அரசாங்கங்கள் விமான நிலையத்திற்கு போதுமான நிதி ஒதுக்காவிட்டால் விமான நிலையங்கள் பயணிகளிடம் இருந்துதான் கட்டணங்களை வசூலிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் பாரோன்கி தெளிவுபடுத்தினார்.

அதிகமானவர்கள் பயணங்களை மேற்கொள்ளும் போது கட்டணங்களும் குறையும் என்றார் அவர். விமானச் சீட்டுகளின் விலை, தேவைக்கு ஏற்பவும் காலத்திற்கு ஏற்பவும் மாறும் என்றும் பாரோன்கி கூறினார்.

சிங்கப்பூரில் அதிகமானவர்கள் பயணங்களை மேற்கொள்வதால் விமான சீட்டுகளின் விலை குறைந்தது. இருப்பினும் 2019ஆம் ஆண்டை விட தற்போது சீட்டுகளின் விலை 7 விழுக்காடு கூடியுள்ளது.

கொவிட் காலகட்டத்தில் குறைந்த அளவிலான மக்களே பயணம் மேற்கொண்டனர் அதனால் விமானச் சீட்டுகளின் விலை கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்