மத்திய கிழக்குப் போரால் சவூதி அரேபியாவில் சிக்கியுள்ள சிங்கப்பூரர்கள் நாடு திரும்ப உதவும் வகையில் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) சிங்கப்பூர் ஆகாயப் படையின் A330 ரக விமானம் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்று உள்துறை அமைச்சும் (MFA) தற்காப்பு அமைச்சும் (MINDEF) திங்கட்கிழமை (மார்ச் 9) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.
அதன்பிறகு இரண்டு நாள் கழித்து இரண்டாம் முறையாக விமானம் சிங்கப்பூரர்களை அழைத்துவர சவூதி அரேபியாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவை குறிப்பிட்டுள்ளன.
சவூதி அரேபியா உள்பட பஹ்ரைன், ஜோர்தான், குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் வர்த்தக விமானச் சேவைகள் தடைபட்டுள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இரு அமைச்சுகளும் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னதாக கடந்த வார இறுதியில் (சனிக்கிழமை மார்ச் 7, ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8) ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து இருமுறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவை மூலம் விமானப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு 319 சிங்கப்பூரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் நாடு திரும்பியுள்ளனர்.
சிங்கப்பூர் ஆகாயப் படையின் விமானங்கள் பாதுகாப்பாக பயணிகளைச் சிங்கப்பூருக்கு அழைத்து வரும் ஒரே நோக்கத்துடன் செயல்படுகின்றன எனவும் அமைச்சுகள் கூறின.
“மத்திய கிழக்கில் உள்ள நிலவரம் தற்போது நிலையில்லாமல் உள்ளது. பல வர்த்தக விமான நிலையங்கள் வழக்கமாகச் செயல்படத் தயாராக இல்லை. பாதுகாப்பு நிச்சயமின்மை காரணமாக இத்தகைய ஏற்பாடுகளை மிகவும் கவனமாக ஒருங்கிணைந்து திட்டமிடவேண்டியுள்ளது,” என்று வெளியுறவு, வர்த்தக தொழில்துறை துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தமது சமூக ஊடகக் காணொளி ஒன்றில் பதிவிட்டுள்ளார்.
சவூதி அரேபியா செல்லவுள்ள சிங்கப்பூர் ஆகாயப் படையின் A330 ரக விமானம் (MRTT) ஒரு நேரத்தில் 266 பேரை ஏற்றிச் செல்ல வல்லது. ஏறத்தாழ 37,000 கிலோகிராம் எடையுள்ள தளவாடங்களையும் அதனால் எடுத்துச் செல்லமுடியும்.
தொடர்புடைய செய்திகள்
அது, வானிலேயே பிற விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதும் மருத்துவச் சேவைகளுடன் அவசரகாலத்தில் மக்கள் வெளியேற்றப் பணிகளையும் செய்யும் திறன்கொண்ட விமானமாகும்.

