ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமைத்துவத்தை ஏற்று நடத்திட புதிய தலைமை நிர்வாகிக்கான தேடலில் ‘டாடா சன்ஸ் குழுமம்‘ மும்முரமாகக் களம் இறங்கியுள்ளது.
தற்போது ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகிக்கும் கேம்பல் வில்சனின் பதவிக்காலம் 2027 பிற்பகுதியில் முடிவுக்கு வரும் நிலையில், அவருக்கு மீண்டும் பணியில் தொடர வாய்ப்பு தரப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் இந்தியாவின் 25.1 விழுக்காட்டுப் பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கைவசம் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக ஏர் இந்தியா சந்தித்து வரும் கடும் பின்னடைவுகளால் சிங்கப்பூர் ஏர்லைன்சின் நிகர வருமானம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர் நஷ்டம், குறிப்பாகக் கடந்த ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த விவகாரம், அதற்குப் பிறகு ஏர் இந்தியா விமான நிறுவனம் சந்தித்த பாதிப்புகள், மெதுவடைந்த வளர்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் டாடா குழுமம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவ்வகையில், ஏர் இந்தியாவின் தலைவரும் டாடா குழுமத் தலைவருமான என். சந்திரசேகரன், அடுத்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வழிநடத்தக்கூடிய தகுதிவாய்ந்த நபரை அடையாளம் காணும் இலக்குடன் பெரிய விமான நிறுவனங்களை நடத்துவதில் அனுபவம் கொண்டவர்கள், அனைத்துலக விமான நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி வில்சன், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஏறத்தாழ 26 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியவர்.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை அனைத்துலகth தரத்துக்குக் கொண்டுவரும் பொறுப்பு அவருக்கு 2022ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. எனினும் விமானச் சேவை மேம்பாடு, வருமானம், தரம், வளர்ச்சி உள்பட எந்தவொரு பிரிவிலும் அவர் குறிப்பிடத் தகுந்த வகையில் செயலாற்றவில்லை என்று டாடா குழுமம் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் புதிய தலைமைத்துவத்தைப் பெறவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகுறித்து முன்வைக்கப்பட்ட கேள்விக்குத் திரு வில்சன் இதுவரை பதிலளிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அகமதாபாத் விமான விபத்து தொடர்பிலான இறுதி அறிக்கை வெளியான பிறகு புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் நியமனம் பற்றிய அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திலும் தலைமைத்துவ மாற்றம் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அலோக் சிங்கின் பதவிக்காலமும் 2027ல் முடிவடைய உள்ளது.

