பிரதமர் லாரன்ஸ் வோங், ஆசியான் நாடுகளுக்கு ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் நேரடி விமானச் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பில் செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய உச்சநிலை மாநாடுகளில் கலந்துகொள்ளும் பிரதமர் வோங், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26), 22வது ஆசியான் - இந்தியா உச்சநிலை மாநாட்டில் உரையாற்றினார்.
ஆசியானும் இந்தியாவும் மக்கள் தொடர்பான உறவுகளைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட திரு வோங், ஆசியான் - இந்தியா சுற்றுப்பயண ஆண்டாக அனுசரிப்பதன் மூலம் 2025ஆம் ஆண்டு இதன் தொடர்பில் மேம்பாடு கண்டிருப்பதாகக் கூறினார்.
நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய சுற்றுப்பயணம் தொடர்பான தலைவர்களின் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இரு தரப்புச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று திரு வோங் கூறினார்.
மக்கள் நிலைப் பரிமாற்றம் அதிகரிக்கும் சூழலில், சிறந்த விமானச் சேவைத் தொடர்பு அவசியமாகிறது என்பதைச் சுட்டிய அவர், ஆசியான் நாடுகள் அனைத்திற்கும் ‘ஏர் இந்தியா’ நேரடி விமானச் சேவைகளை வழங்குவதன் தொடர்பில் செயலாற்ற வேண்டும் என்றார்.
இந்தோ-பசிபிக் பெருங்கடல் திட்டம் உட்பட, மாணவர் பரிமாற்றம், ஆய்வுப் பரிமாற்றத் திட்டங்கள் போன்றவை குறித்தும் பரிசீலிக்கலாம் என்று பிரதமர் சொன்னார்.
வட்டார அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பைக் கட்டிக்காக்க வேண்டியதன் அவசியத்தை அவர் தமது உரையில் எடுத்துக் கூறினார்.
மேலும், நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய எரிசக்தித் துறையில், சூரியசக்தி, ஹைட்ரஜன் எரிசக்தி போன்றவற்றில் இந்தியாவின் நிபுணத்துவத்தை ஆசியான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இரு தரப்புப் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், இருவழி முதலீட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தி, மக்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அடுத்த ஆண்டு (2026) ஆசியான் - இந்தியா கடல்துறை ஒத்துழைப்பு ஆண்டாக அனுசரிக்கப்படுவதை வரவேற்பதாகக் கூறிய திரு வோங், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த மேலும் ஓர் உந்துசக்தியாக அது அமையும் என்றார்.
பல்வேறு துறைகளில் அணுக்கமாகப் பணியாற்றுவதன் மூலம் ஆசியானும் இந்தியாவும் இருதரப்பு மக்களுக்கு ஒளிமயமான வருங்காலத்தை உறுதிசெய்ய முடியும் என்று பிரதமர் வோங் நம்பிக்கை தெரிவித்தார்.

