சிங்கப்பூரின் கிழக்கு வட்டாரத்தில் 102ஐத் தொட்ட காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு

சிங்கப்பூரின் கிழக்கு வட்டாரத்தில் 102ஐத் தொட்ட காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு

1 mins read
03d89cc0-9330-4dd0-8b21-30a090d4858c
தோ பாயோ லோரோங் 1 வட்டாரத்திலிருந்து செப்டம்பர் 4ஆம் தேதி காலை 9 மணியளவில் எடுக்கப்பட்ட காட்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

எல்லை தாண்டிய புகைமூட்டம் காரணமாகச் சிங்கப்பூரின் சில பகுதிகளில் காற்றின் தூய்மைக்கேடு அதிகரித்து, 24 மணி நேர ‘காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 101ஐத் தாண்டி ‘சுகாதாரமற்ற’ நிலையை எட்டியுள்ளது.

2023 அக்டோபர் மாதத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் காற்றின் தரம் இந்த அளவுக்கு மோசமடைவது இதுவே முதல்முறையாகும்.

சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை காரணமாகக் காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளது. அங்கிருந்து வீசும் தென்திசைக் காற்றினால் கிளம்பும் அடர்ந்த புகைப் படலம், சிங்கப்பூர் வட்டாரத்தை நோக்கி நகர்ந்து வருவதாகத் தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. 

சிங்கப்பூரின் மத்திய, கிழக்கு வட்டாரங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு100ஐத் தாண்டி உயர்ந்துள்ளது. காற்றின் தரம் ‘சுகாதாரமற்ற’ நிலைக்கு மாறியுள்ளதால், பொதுமக்கள் வெளிப்புறம் சார்ந்த நடவடிக்கைகளையும் உடற்பயிற்சிகளையும் அதிகச் சிரமமளிக்கும் வெளிப்புறச் செயல்பாடுகளையும் குறைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புகைமூட்டத்தின் தாக்கம் தொடரக்கூடும் என்பதால், பொதுமக்கள் நிலைமையைக் கண்காணித்து, தங்கள் அன்றாடச் செயல்பாடுகளைத் திட்டமிட்டுக்கொள்ள வசதியாக அன்றாடம் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு சார்ந்த முன்னறிவிப்பை தேசியச் சுற்றுப்புற வாரியம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்புகைபுகைமூட்டம்மாசுபாடு