மனித நடவடிக்கைகளால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றம், காட்டுத் தீச்சம்பவங்கள் போன்றவற்றால் உலகில் 135 மில்லியன் பேர் அகால மரணமடைந்ததாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
1980ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையில் காற்றுத் தூய்மைக்கேட்டால் அவர்கள் மாண்டதாக அந்த ஆய்வு கூறியது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் ஜூன் 10ஆம் தேதி வெளியிடப்பட்டன.
‘எல் நினோ’, ‘இண்டியன் ஓஷியன் டைபோல்’ போன்ற நிகழ்வுகள் காற்றுத் தூய்மைக்கேட்டை மோசமாக்கியதாக ஆய்வாளர்கள் கூறினர்.
மாசடைந்த காற்றில் காணப்படும் நுண்ணிய துகள்கள், சுவாசத்தின் வழியாக மனிதர்களின் ரத்தத்தில் கலக்கும்போது உடல்நலத்தைப் பாதிக்கின்றன.
வாகனப் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, தீச்சம்பவங்கள், புழுதிச் சுழல்காற்று போன்றவற்றில் காணப்படும் இந்த நுண்துகள்களால் உலகெங்கும் 135 மில்லியன் பேர் அகால மரணமடைந்தனர்.
சராசரி மனித ஆயுட்காலத்துக்கு முன்பாகவே மனிதர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பக்கவாதம், இதய நோய், நுரையீரல் நோய் போன்றவற்றால் அவர்கள் மாண்டனர்.
வானிலை அம்சங்களால் உயிரிழந்தோர் விகிதம் 14 விழுக்காடு அதிகரித்ததாக ஆய்வு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
மாண்டவர்களில் ஆக அதிகமானோர் ஆசியர்கள். காற்றுத் தூய்மைக்கேட்டால் ஆசியாவில் 98 மில்லியன் பேர் மாண்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் சீனாவையும் இந்தியாவையும் சேர்ந்தவர்கள் என்றும் என்டியு தெரிவித்தது.
பாகிஸ்தான், பங்ளாதேஷ், இந்தோனீசியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 முதல் 5 மில்லியன் பேர் இவ்வாறு அகால மரணமடைந்தனர்.
“பருவநிலை மாற்றம் காற்றுத் தூய்மைக்கேட்டை மோசமாக்கக்கூடும் என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது,” என்று ஆய்வுக் குழுத் தலைவரான இணைப் பேராசிரியர் ஸ்டீவ் யிம் கூறினார்.
ஆய்வாளர்கள், பூமியின் காற்று மண்டலத்தில் காணப்படும் மாசு நுண்துகள்கள் பற்றிய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான ‘நாசா’வின் செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததாகக் கூறப்பட்டது.
அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்ட ‘ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் இவேலுவேஷன்’ எனும் ஆய்வு நிலையத்தின் தரவுகளின் அடிப்படையில் காற்றுத் தூய்மைக்கேட்டால் மாண்டோர் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஹாங்காங், பிரிட்டன், சீனா ஆகியவற்றில் உள்ள பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்களும் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் உலெகெங்கும் 6.7 மில்லியன் பேர் காற்றுத் தூய்மைக்கேட்டால் அகால மரணமடைவதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.