சிங்கப்பூரின் புகைமூட்ட நிலவரம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சற்று தணிந்திருந்தாலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.
காலை 9 மணிக்கு, 24 மணிநேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) வடக்கில் 118, தெற்கில் 115, கிழக்கில் 138, மேற்கில் 152 என்பதோடு மத்திய வட்டாரத்தில் 151 என்ற எண்ணிக்கையைக் காட்டியது. இவை அனைத்தும் ஆரோக்கியமற்ற நிலையைக் குறிப்பன.
இருப்பினும் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மத்திய வட்டாரத்தில் கணிக்கப்பட்ட 183 என்பதைவிடத் தற்போதைய நிலைமை சற்று மேம்பட்டுள்ளது.
அதேவேளையில் ஒரு மணிநேரத்துக்கு கணிக்கப்படும் பிஎம்2.5 குறியீடு உயர்த்தப்பட்ட இரண்டாம் நிலையில் நீடித்தது. அதன்படி வடக்கில் 69, தெற்கில் 71, கிழக்கில் 93, மேற்கில் 88 எனவும் மத்திய வட்டாரத்தில் 87 எனவும் பதிவானது.
உடனடியான காற்றுத் தரத்தைக் கணிக்கக்கூடிய பிஎம் 2.5 குறியீட்டின்படி, 56 முதல் 150 என்பது உயர்த்தப்பட்ட காற்று மாசின் அளவைக் குறிக்கும். அதேவேளை, 151 முதல் 250 என்ற எண்ணிக்கை அதிக அளவிலான காற்று மாசுபாட்டைக் குறிப்பிடுவதாகும்.
