மத்திய சிங்கப்பூரில் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

மத்திய சிங்கப்பூரில் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

2 mins read
cb233fb7-d36f-4029-b54b-e236ec7b54ab
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) காலை மணி 7.50க்குக் கிளமெண்டியில் புகைமூட்டத்தைக் காணமுடிந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 101ஐத் தாண்டியுள்ளது. காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) காலை 8 மணி நிலவரப்படி, சிங்கப்பூரின் மத்திய பகுதியில் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 103ஆக இருந்தது என்று தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளம் கூறுகிறது.

காலை 7 மணிக்கு அது 101ஆக இருந்தது.

காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு, 101 முதல் 200 வரை இருக்கும்போது காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்குச் சுற்றுப்புற வாரியம் அறிவுறுத்துகிறது.

புகைமூட்டம் காரணமாக, குறியீடு இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருந்தது.

இம்முறை, வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை நோக்கி மெல்ல உயரத் தொடங்கியது.

அதிகாலை 1 மணிக்குக் குறியீடு 70 முதல் 90 வரை மிதமான வரம்பிற்குள் இருந்தது; இதில் ஆக அதிகமாக மத்திய சிங்கப்பூரில் குறியீடு 90 எனப் பதிவானது. அந்த வட்டாரத்தில் காலை 6 மணிக்கு அது 99ஐ எட்டியது.

சிங்கப்பூர் வானிலை ஆய்வகம், செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இம்மாதத்தின் முற்பாதியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும் என்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்குச் சிங்கப்பூரில் புகைமூட்டமான சூழல் நிலவக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

இரண்டாவது வாரத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இந்நிலை தொடரக்கூடும் என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்
காற்றுத்தரம்தூய்மைக்கேடுகுறியீடுசிங்கப்பூர்புகைமூட்டம்