சிங்கப்பூரில் அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 12 நாள்களாகக் காற்றின் தரத்தைக் குறிக்கும் பிஎஸ்ஐ குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் நீடிக்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரில் காற்றின் தரம் தொடர்ந்து இத்தனை நாள்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததில்லை. அந்த ஆண்டு செப்டம்பர் 23லிருந்து அக்டோபர் 7ஆம் தேதி வரை 14 நாள்களுக்குக் காற்றின் தரம் மோசமாக இருந்தது.
சிங்ஸ்டேட் தளத்தில் உள்ள அரசாங்கப் புள்ளிவிவரங்களில், முந்தைய ஆண்டுகளுக்கான 24 மணிநேரத்துக்கான பிஎஸ்ஐ குறியீட்டு விவரங்களைக் கொண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இத்தகவலை அறிந்துகொண்டது.
ஒப்புநோக்க 2019, 2023ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் காற்றுத்தரம் மோசமாக இருந்த காலம் குறைவாக இருந்தது. அந்த இரு ஆண்டுகளிலும் இரண்டு நாள்களுக்குக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.
ஆரோக்கியமற்ற நிலையில் காற்றுத்தரம்
சிங்கப்பூரின் எந்தப் பகுதியிலாவது பிஎஸ்ஐ குறியீடு 100ஐத் தாண்டினால் அது காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதைக் குறிக்கும். பிஎஸ்ஐ குறியீட்டை மையமாக வைத்து விடுக்கப்படும் சுகாதார ஆலோசனைகளின்படி ஆரோக்கியமாக இருப்பவர்கள் குறியீடு 101ஐத் தாண்டினால் தாங்கள் பொதுவாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தளர்த்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
காற்றின் தரம் மிக ஆரோக்கியமற்ற நிலையை எட்டும்போது சுகாதாரப் பிரச்சினைகள் இல்லாதவர்கள் வெகுநேரம் நீடிக்கும் அல்லது உடலுக்கு அதிகக் களைப்பை ஏற்படுத்தும் உடல்ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டும்போது ஆரோக்கியமாக இருப்பவர்களும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
2015ல் நிலைமை
2015ல் சிங்கப்பூரின் காற்றுத்தரம் அபாயக் கட்டத்தை எட்டியது. அந்த ஆண்டு பிஎஸ்ஐ குறியீடு 300ஐத் தாண்டியது.
இவ்வாண்டு இதுவரை காற்றின் தரம் மிக ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருக்கிறது.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக, 24 மணிநேரத்துக்கான பிஎஸ்ஐ குறியீடு 149ஆகப் பதிவானது. மத்தியப் பகுதியில்தான் குறியீடு ஆக மோசமாக 227ஆகப் பதிவானது.
