சிங்கப்பூரின் சில பகுதிகளில் காற்றுத்தரம் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

சிங்கப்பூரின் சில பகுதிகளில் காற்றுத்தரம் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Oct 2026 - 9:42 am

1 mins read

சிங்கப்பூரின் சில இடங்களில் காற்றுத்தரம் திங்கட்கிழமை (அக்டோபர் 5) அதிகாலை மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

காலை 6 மணி நிலவரப்படி, 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு மத்திய வட்டாரத்தில் 110ஆகவும் மேற்கு வட்டாரத்தில் 102ஆகவும் பதிவானது.

சிங்கப்பூரின் ஐந்து வட்டாரங்களில் இரண்டில், காற்றில் மிதக்கும் மிக நுண்ணிய பிஎம்2.5 தூசுத்துகள்களின் அளவு அதிகரித்துக் காணப்பட்டது.

அந்த அளவு மத்திய வட்டாரத்தில் 93ஆகவும், மேற்கு வட்டாரத்தில் 81ஆகவும் இருந்தது. வடக்கு, தெற்கு, கிழக்கு வட்டாரங்களில் பிஎம்2.5 தூசுத்துகள்களின் அளவு 49 முதல் 52 வரை இயல்பு நிலையில் பதிவானது.

24 மணி நேரத்துக்கான காற்றுமாசுக் குறியீடு (பிஎஸ்ஐ), 101 முதல் 200 வரை இருந்தால் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.

அதே வேளையில், மணிக்கு ஒருமுறை கணக்கிடப்படும் பிஎம் 2.5 அளவீடு 56 முதல் 150 வரை இருந்தால், அது காற்றில் கலந்துள்ள நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.

அக்டோபர் 4ஆம் தேதி, அதிகாலை 3 மணியளவில் 103 எனும் உச்சத்தை எட்டிய பிஎஸ்ஐ, பின்னர் சரிந்து 90களில் நீடித்தது.

இரவு 9 மணியளவில் 101 என ஆரோக்கியமற்ற நிலைக்கு உயர்ந்து, இரவு 11 மணிக்கு மீண்டும் 99க்குக் குறைந்தது.

இருப்பினும், நள்ளிரவு முதல் மீண்டும் உயரத் தொடங்கி 100ஐ எட்டிய பிஎஸ்ஐ குறியீடு, இரவு முழுவதும் சீராக அதிகரிக்கத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்
புகைமூட்டம்காற்றுத்தரம்ஆரோக்கியம்