மோசமான வானிலை காரணமாக சாங்கி விமான நிலையத்தில் விமானங்களை மாற்றுவழியில் திருப்பிவிட்ட சம்பவங்கள் இவ்வாண்டு அதிகரித்துள்ளதால் அதுகுறித்து தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
வானிலை நிலவரத்தை இன்னும் துல்லியமாக முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலை ஏற்படுத்த அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாக சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
வானிலை நிலவரத்தால் விமானங்களைத் திசைதிருப்பிவிட்ட சம்பவங்கள் இவ்வாண்டில் இதுவரை ஆறு மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
புதிய விமானப் போக்குவரத்து வானிலை ஆய்வுத் திட்டத்தின் வாயிலாக வானிலை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உருவாக்கப்படும். அத்துடன், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் வானிலை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்கான ஆற்றலும் செயல்பாடுகளும் கண்டறியப்படும்.
சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் விமானச் சேவைகளைப் பாதிக்கக்கூடிய ஐந்து முக்கியமான வானிலை நிகழ்வுகள் மீது ஆய்வுத் திட்டம் கவனம் செலுத்தும். குளிர்ந்த காற்றை கீழே அழுத்தி மேலெழும் வெப்பக் காற்று மூலம் உருவாகும் மேகம், மழை, காற்று போன்றவை சாங்கி விமான நிலைய விமானப் போக்குவரத்தில் மாற்றங்கள் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணங்களாக அமைந்தன.
அந்த வெப்பச்சலனம் காரணமாக 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒன்பது விமானங்கள் திசைதிருப்பிவிடப்பட்டன. இவ்வாண்டு நவம்பர் வரையிலான அதே காலகட்டத்தில் 55 விமானங்கள் திசைதிருப்பி விடப்பட்டன.
இந்த வட்டாரத்தின் வெப்பச்சலனம், எளிதில் கணிக்கமுடியாத இடியுடன் கூடிய மழையாக மாறி காற்றின் வேகத்தையும் திசையையும் திடுதிப்பென்று மாற்றிவிடுவதாக சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) தெரிவித்தன.
விமானநிலையச் செயல்பாடுகளை மேலும் சிறப்பானதாக வைத்திருக்கும் நோக்கில் வானிலை முன்னறிவிப்புச் செயல்பாடுகளை மேம்படுத்த இணைந்து பணியாற்ற இருப்பதாக அந்த இரு அமைப்புகளும் கூறியுள்ளன. கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட இருக்கும் அம்சங்களில் மின்னலும் அடங்கும்.

