த. கவி
இவ்வார இறுதியில் என்ன செய்வது என்று தெரியவில்லையா? நேராக சாங்கி கண்காட்சி மையத்திற்குச் செல்லுங்கள்!
‘சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2026’ பார்வையாளர்களுக்குத் தனது கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.
கண்காட்சியைப் பொதுமக்கள் அனைவரும் இம்மாதம் 7, 8ஆம் தேதிகளில் கண்குளிர கண்டு ரசிக்கலாம்.
30க்கும் மேற்பட்ட வணிக ரீதியான, ராணுவ, ஆளில்லா விமானங்களைப் பார்வையாளர்கள் அருகில் சென்று பார்த்து ரசிக்கலாம்.
ஏர்பஸ் (Airbus), பாம்படியர் (Bombardier), கோமாக் (COMAC), டசால்ட் (Dassault) போன்ற நிறுவனங்கள், இந்திய விமானப்படை, ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை போன்ற விமானப் படைகளின் விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
குடும்பத்தினர், விமான ஆர்வலர்களுக்காக பல அனுபவமூட்டும் கூடாரங்களும் உற்சாகமூட்டும் நடவடிக்கைகள் பலவும் விமானக் கண்ட்காட்சியைக் காண வருபவர்களுக்காகக் காத்திருக்கின்றன.
சிங்கப்பூர் குடியரசு ஆயுதப்படையின் (RSAF) அரங்கில் உள்ள பாவனைப் பயிற்சிக் கூடங்களில் ஃஎப்-16 போர் விமானத்தை அல்லது ஏஎச்-64டி அப்பாச்சி ஹெலிகாப்டரை ஓட்டிப் பார்க்கும் அனுபவத்தைப் பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
வான்வழி சாகசக் குழுவினரை நேரில் சந்தித்து, அவர்களுடைய கதைகளையும், விமானத் துறை வேலை அனுபவங்களையும் கேட்டறியும் வாய்ப்பும் பார்வையாளர்களுக்குக் கிட்டும்.
வான்சாகசக் காட்சிகள்
சிங்கப்பூர், இந்தியா, இந்தோனீசியா, சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விமானப்படைக் குழுவினருடன் ஏர்பஸ், கோமாக் நிறுவனங்களின் விமானங்களும் இணைந்து பங்கேற்கும் வியப்பூட்டும் கண்கவர் ஆகாய சாகசங்கள் நடைபெறவுள்ளன.
காட்சி நேரம் (இரு நாள்களும்)
பிப்ரவரி 7, 8ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) இரு நாள்களிலும் காலை 11:00 மணி முதல் 11:40 மணி வரையும், பிற்பகல் 3:30 மணி முதல் 4:10 மணி வரையும் நடைபெறும் மெய்சிலிர்க்க வைக்கும் விமான சாகசக் காட்சிகளைத் தவறவிடாதீர்கள்.
நுழைவுச்சீட்டு விவரம்
வார இறுதி நாள்களுக்கான நுழைவுச்சீட்டுகளை சிஸ்டிக் (SISTIC) இணையத்தளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
பெரியவர்கள்: $39, குழந்தைகள் (3 முதல் 12 வயது): $19
குழுவுக்கான நுழைவுச்சீட்டுகள் (4 நுழைவுச்சீட்ட்ய்கள் + 1 கார் நிறுத்த வசதி): $250
கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பார்வையாளர்கள் எக்ஸ்போ எம்ஆர்டி நிலையத்திலிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பேருந்துக்கான வரிசை எக்ஸ்போ ஹால் 5ல் தொடங்கும்.

