விமானக் கட்டணங்கள் குறைய கூடுதல் காலம் எடுக்கும்: ஐஏடிஏ

விமானக் கட்டணங்கள் குறைய கூடுதல் காலம் எடுக்கும்: ஐஏடிஏ

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

08 Jun 2026 - 2:56 pm

2 mins read

ரியோ டி ஜெனிரோ: உலகளவில் விமானக் கட்டணங்கள் இயல்புநிலைக்குத் திரும்ப பொதுமக்கள் எதிர்பார்ப்பதைவிட கூடுதல் காலமாகும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த எரிசக்தி நெருக்கடி நீடிக்கிறது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற சங்கத்தின் வருடாந்தர பொதுக்கூட்டத்தில், நீடித்த நிலைத்தன்மைப் பிரிவு உதவி மூத்த தலைவரும் மூத்த பொருளியல் நிபுணருமான மேரி ஓவன்ஸ் தாம்சன் பேரிசானர்.

“உலகெங்கிலும் உள்ள சுத்திகரிப்புத் திறன் சமமற்ற நிலையில் இருப்பதால் ஐரோப்பா போன்ற இடங்கள் எரிபொருள் இறக்குமதிக்கு மத்திய கிழக்கு நாடுகளையே பெரிதும் நம்பியுள்ளன,” என்றார் அவர்.

ஜனவரி மாதத்தில் ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 60 அமெரிக்க டாலராக இருந்த நிலை மீண்டும் திரும்புவதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்றும் அதுவரை கட்டண உயர்வு நீடிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

சங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, விமான எரிபொருள் விலை 2025ஆம் ஆண்டில் பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் அது 152 அமெரிக்க டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்கள் நட்டத்தைத் தவிர்க்கவும் செலவினங்களைச் சமாளிக்கவும் இந்த விவரம் தெரிந்தே கட்டணங்களை உயர்த்தி வருகின்றன. வழக்கமாக, எரிபொருள் விலை உயர்வின் பாதியை விமான நிறுவனங்கள் அவற்றின் லாப வரம்பில் ஏற்றுக்கொண்டு, மீதிப் பாதியை மட்டுமே பயணிகளுக்குக் கூடுதல் கட்டணமாக மாற்றுகின்றன.

கடந்த மே மாதத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையிலும் எரிபொருள் விலை உயர்வின் முழுப் பாதிப்பையும் பயணிகள்மீது சுமத்தப்போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையே, ஜூன் 12ஆம் தேதிமுதல் ஜூலை 20ஆம் தேதிவரை உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளதால் வாகனங்களுக்கான பெட்ரோல் தேவை அதிகரிக்கும்.

இதனால், சுத்திகரிப்பு நிலையங்கள் விமான எரிபொருளைவிட பெட்ரோல் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடும் என்பதால், கோடைக்காலப் பயணங்களின்போது விமான எரிபொருள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக எஸ் அண்ட் பி குளோபல் பகுப்பாய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

கோடைக்காலத்துக்குப் பிறகு விலை ஓரளவு கட்டுக்குள் வந்தாலும், இந்த ஆண்டு இறுதிவரை கட்டணங்கள் ஏற்றத்திலேயே இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
விமானம்எரிபொருள்கட்டணம்