கடல்நீரின் மேற்பரப்பில் பறக்கக்கூடிய ஏர்ஃபிஷ் என்னும் சிறு விமானம் சிங்கப்பூருக்கும் பாத்தாமுக்கும் இடையில் இவ்வாண்டில் பயணச் சேவையாற்ற உள்ளது.
சிங்கப்பூரின் தானா மேரா படகு முனையத்திலிருந்து இந்தோனீசியாவின் பாத்தாமுக்கு அது சென்று திரும்பும்.
தீவுகளுக்கு இடையிலான கடல்துறைப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் இந்த விமானத்தை உருவாக்க சிங்கப்பூரின் ‘எஸ்டி இன்ஜினியரிங் ஏர்எக்ஸ்’, படகு சவாரி சேவை நடத்தும் ‘பாத்தாம்ஃபாஸ்ட்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
காற்றைவிட அடர்த்தி குறைந்த வாயுவைப் பயன்படுத்தி நீரின் மீது வேகமாகச் செல்லக்கூடியது ‘ஏர்ஃபிஷ்’. அதில் எட்டுப் பயணிகளும் இரு பணியாளர்களும் பயணம் செய்யலாம்.
சிங்கப்பூர் ஆகாயக் காட்சியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) அது அறிமுகம் செய்யப்பட்டது.
ஆண்டின் பிற்பாதியில் பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தாலும் அதற்கான அனுமதியை இன்னும் பெறவேண்டி உள்ளதாக எஸ்டி இன்ஜினியரிங் தெரிவித்தது.
பயணச் சேவை தொடங்கப்பட்ட பின்னர், தென்கிழக்கு ஆசியாவில் புதிய இடங்களுக்கு அந்தச் சேவையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ‘எஸ்டி இன்ஜினியரிங் ஏர்எக்ஸ்’, ‘பாத்தாம்ஃபாஸ்ட்’ ஆகிய இரு நிறுவனங்களும் ஆராயும்.
“கடல்நீரின் மேற்பரப்பில் வேகமாகச் செல்வதன் மூலம் தானா மேராவிலிருந்து பாத்தாமை 25 நிமிடங்களில் சென்றடைந்து விடலாம். தற்போது படகு மூலம் பாத்தாம் செல்ல 45 நிமிடங்கள் ஆகிறது,” என்று பாத்தாம்ஃபாஸ்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் சுவா சூன் லெங் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பயணக் கட்டணமும் எந்தெந்த நேரத்தில் விமானச் சேவை இருக்கும் என்ற விவரமும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார் அவர்.
படகு சவாரிக்கு வசூலிக்கப்படுவதைக் காட்டிலும் அதிகக் கட்டணம் இருக்கும் என்று கூறிய திரு சுவா, அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
படகில் ஒரு நேரத்தில் 200 முதல் 300 பேர் பயணம் செய்யும் வேளையில் சிறு விமானத்தில் எட்டுப் பேர் வரை மட்டுமே செல்ல முடியும் என்பதால் கட்டணமும் அதற்கேற்ப சற்று அதிகமாக இருக்கும் என்றார் அவர்.
“அந்தக் கூடுதல் கட்டணம் வேகமான பயணத்திற்குச் செலுத்தப்படக்கூடியது,” என்றும் திரு சுவா தெரிவித்தார்.

