நாளொன்றுக்கு 8 முறை வரை அலறும் கடிகாரம்; தியோங் பாரு வட்டாரவாசிகள் அவதி

1 mins read
4839c033-5d83-4b60-95ed-99ad8c9cc8e4
தியோங் பாருவில் உள்ள புளோக் 55ல் ஆளில்லா வீட்டிலிருந்து பலமுறை எழும் கடிகார ஒலியால் அவதியுறுவதாகக் குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர் - படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

நாளொன்றிற்கு 8 முறைவரை கேட்கும் கடிகார ஒலியால் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தியோங் பாரு குடியிருப்பாளர்கள் தொந்தரவுக்கு ஆளாவதாகத் தெரியவந்துள்ளது.

டிசம்பர் தொடக்கத்திலிருந்து ஒரு நாளைக்கு எட்டு முறை கேட்கும் உரத்த கடிகார ஒலி அவ்வட்டாரத்தில் அமைந்துள்ள புளோக் 55ல் இருந்து எழுவதாகக் குடியிருப்பாளர்கள் நம்புகின்றனர்.

மேலும் அந்த புளோக்கின் குறிப்பிட்ட ஒரு வீட்டிலிருந்து அந்தச் சத்தம் வருவதாக வட்டாரவாசிகள் கருதும் நிலையில், அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடைசியாக அந்தக் கடிகார ஒலி ஜனவரி 12ல் கேட்டது என்றும், அந்த வீட்டின் உரிமையாளர் இவ்வாறு ஒலி எழுப்பும் வகையில் கடிகாரத்தை அமைத்திருக்கக்கூடும் என்றும் அக்கம்பக்கக் குடியிருப்பாளர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

எந்த நேரத்திலும் எழும் இந்தக் கடிகார ஒலியால் அவதியுறுவதாக புளோக்குகள் 55, 56ல் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் இந்தக் கடிகார சத்தத்தால் வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழல் பாதிக்கப்டுகிறது,  தூக்கம் கலைகிறது என்பன உள்ளிட்ட  புகாரும் எழுந்துள்ளது.

குறிப்பாகக் குடியிருப்பாளர்கள் பலர் இந்தத் தொந்தரவு குறித்துக் காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளனர். மேலும் தஞ்சோங் பகார் நகர மன்றத்திடமும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சத்தம் வந்த இடத்திற்கு அருகில் உள்ள புளோக் 55க்கு அருகில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து வசித்துவரும் திருவாட்டி சாரா கே, 26, சில நாள்களில் அந்தக் கடிகார ஒலியால் எழுந்த சத்தம் காலை 6 மணிக்கே தன்னை எழுப்பிவிட்டது என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்