காலாவதியான வங்கி மின்னிலக்க டோக்கனை, கிளிக் செய்யக்கூடிய இணைப்பு மூலம் செயல்படுத்தவோ, புதுப்பிக்கவோ கேட்டு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தால், அது ஒரு மோசடியாக இருக்கலாம்.
ஜனவரி 15 முதல், டிபிஎஸ் அல்லது பிஓஎஸ்பி வங்கி அனுப்பியது போன்ற மின்னஞ்சல்கள் மூலம், குறைந்தது 72 சம்பவங்களில், பாதிக்கப்பட்டோர் குறைந்தபட்சம் $484,000 இழந்ததாக, மார்ச் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட ஓர் ஆலோசனைக் குறிப்பில் காவல்துறையும் டிபிஎஸ் வங்கியும் தெரிவித்துள்ளன.
அந்த மின்னஞ்சல்களில், செயலிக்குள் இருக்கும் ஓர் அங்கீகார அம்சமான அவர்களின் மின்னிலக்க டோக்கன் காலாவதியாகிவிட்டதாகவும், அதைச் செயல்படுத்தவோ, புதுப்பிக்கவோ வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் கூறப்பட்டிருக்கும்.
மின்னஞ்சலில் பதிக்கப்பட்டுள்ள ஓர் இணைப்பு வழியாக, அவர்கள் டிபிஎஸ் அல்லது பிஓஎஸ்பி இணையப்பக்கம்போல் தோற்றமளிக்கும் ஒரு மோசடி இணையத்தளத்திற்கு வழிநடத்தப்படுவார்கள்.
பின்னர், அவர்கள் தங்கள் வங்கிச் சான்றுகள், கடன் அல்லது பற்று அட்டை விவரங்கள் அல்லது ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லை (ஓடிபி) உள்ளிடுமாறு தவறாக வழிநடத்தப்படுவார்கள்.
பாதிக்கப்பட்டோர் பின்னர், தங்கள் வங்கிக் கணக்குகள் அல்லது அட்டைகளில் அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகள் அல்லது வெளிநாட்டு நாணயங்களில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளைக் கண்டறிவார்கள்.
சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் ஒருபோதும் மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகள் வழியாகச் சொடுக்கக்கூடிய இணைப்புகளை அனுப்பமாட்டா என்று காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியது.
மின்னிலக்க டோக்கன்களை அதிகாரபூர்வ டிபிஎஸ் அல்லது பிஓஎஸ்பி மின்னிலக்க வங்கிச் செயலி மூலமாக மட்டுமே அமைக்க முடியும் என்றும், கிளிக் செய்யக்கூடிய இணைப்பு மூலம் ஒருபோதும் அமைக்க முடியாது என்றும் காவல்துறை மேலும் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
வளர்ந்து வரும் மோசடித் தந்திரங்களை எதிர்கொள்ளும் வகையில் டிபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
தங்களின் வங்கியின் கடன் அல்லது பற்று அட்டை விவரங்கள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் கடவுச்சொல் போன்ற முக்கியமான தகவல்களை ஒருபோதும் யாரிடமும் வெளியிட வேண்டாம் என்று காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

