வாடிக்கையாளர்கள் இனி ஃபேர்பிரைஸ் குழுமத்தின் கடைகளில் அலிபே+ (Alipay+) கட்டண முறையைக் கொண்டு பொருள்களுக்குக் கட்டணம் செலுத்தலாம்.
ஃபேர்பிரைஸ் குழுமத்தின் 500க்கும் மேற்பட்ட கடைகளுக்கு இது பொருந்தும். அக்குழுமத்தின் பேரங்காடிகள், ‘சியர்ஸ்’ போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள், கோப்பித்தியாம் மற்றும் ஃபுட்ஃபேர் உணவு நிலையங்கள்உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
ஃபேர்பிரைஸ் குழுமத்துக்கும் ஏன்ட் இன்டர்னேஷனல் நிறுவனத்துக்கும் இடையிலான பங்காளித்துவ ஒப்பந்தத்தின் அங்கமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலிபே+, ஏன்ட் இன்டர்னேஷனலுக்குச் சொந்தமானது.
இந்தப் பங்காளித்துவத்தின் ஓர் அங்கமாக ‘சியர்ஸ் மினி’ செயலியும் வெளியிடப்பட்டுள்ளது. இச்செயலி, சிங்கப்பூரில் அனைத்துலகச் சுற்றுப்பயணிகளுக்கு மெய்நிகர் வழிகாட்டியாக இருக்கும். ஃபேர்பிரைஸ் குழுமமும் ஏன்ட் இன்டர்னேஷனலும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) வெளியிட்ட கூட்டறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டது.
சுற்றுப்பயணிகள் சிங்கப்பூர் வந்தடைவதற்கு முன்பு பொருள் வாங்குவதற்கான பரிந்துரைகள் போன்றவற்றை ‘சியர்ஸ் மினி’ செயலி அளிக்கும். செயலியின் மூலம் அவர்கள் பற்றுச்சீட்டுகளையும் பெற முடியும்.
சுற்றுலா, சில்லறை வர்த்தகம் ஆகியவற்றைப் பொறுத்தவரை அனைத்துலகச் சுற்றுப்பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்துவதே இந்தப் பங்காளித்துவத்தின் நோக்கம் என்று ஃபேர்பிரைசும் ஏன்ட் இன்டர்னேஷனலும் தெரிவித்துள்ளன.