தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கான மசெக வேட்பாளர்கள் அறிவிப்பு

3 mins read
1d062b1a-f9c9-46e3-b6a9-e980751ab7a5
மசெக உதவித் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங், ஏப்ரல் 13ஆம் தேதி, அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தார். - படம்: ரவி சிங்காரம்

அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கான வேட்பாளர்களை மக்கள் செயல் கட்சி (மசெக) அறிவித்துள்ளது.

ஏப்ரல் 13ஆம் தேதி, மசெக உதவித் தலைமைச் செயலாளரும் கல்வி அமைச்சருமான சான் சுன் சிங் வேட்பாளர்களை அறிவித்தார்.

“இம்முறை அனுபவமிக்கவர்கள், புதிதாக வந்தவர்கள் என இரு தரப்பினரையும் இந்தக் குழுத்தொகுதியில் வேட்பாளர்களாக அறிமுகப்படுத்த விரும்புகிறோம்.

“உலக நியதி மாறியுள்ளது. ஆனால் நாம் ஒன்றுபட்டால் புதிய வாய்ப்புகள் இருக்கக்கூடும். நம் நாடாளுமன்றக் கட்டமைப்பில் எப்பொழுதும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு இடம் உண்டு. நம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நல்ல, செயல்திறன்மிக்க அரசாங்கத்தை அமைக்க விரும்புகிறோம்,” என்றார் திரு சான்.

அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கான அடித்தள ஆலோசகரும் மசெக சிராங்கூன் கிளைத் தலைவருமான சான் ஹுவெய் யூ ஐவர் கொண்ட அணிக்குத் தலைமை தாங்குவார். அவரைத் தவிர மற்ற நால்வரும் முதன்முறையாக இத்தொகுதியில் வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர்.

டாக்டர் ஃபைசல் அப்துல் அஸீஸ், திரு டேனியல் லியூ கயுவென், திரு ஜெகதீஸ்வரன் ராஜு, டாக்டர் ஏட்ரியன் ஆங் ஆகியோர் அந்த நால்வர்.

“நான் பராமரிப்பாளர்களுக்குக் குரல்கொடுக்க விரும்புகிறேன். என் மறைந்த தாயாரைப் பராமரித்தேன். இப்போது என் வயதான தந்தைக்கும் பராமரிப்பாளராக இருக்கிறேன். அதனால் பராமரிப்பாளர்கள் அன்றாடம் செய்யும் தியாகங்கள், படும் க‌ஷ்டங்கள் எனக்குத் தெரியும். பராமரிப்பாளர்களின் மனநலத்தை நான் மேம்படுத்த விரும்புகிறேன்,” என்றார் திரு ஜெகதீஸ்வரன் ராஜு.

17 ஆண்டுகளாகச் சமூகத் தொண்டூழியராகவும் 13 ஆண்டுகளாகத் தொழிற்சங்கவாதியாகவும் செயல்படும் அவர், மசெக யூனோஸ் கிளைத் தலைவராகச் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி பொறுப்பேற்றார்.

2009 முதல் அவர் ஹாலண்ட்-புக்கிட் தீமா குழுத்தொகுதியின் செங்ஹுவா பிரிவில் மசெக உறுப்பினராகச் செயலாற்றிவந்தார். அங்கு மசெக கிளைச் செயலாளராக எட்டு ஆண்டுகளாகவும் அவர் சேவையாற்றினார்.

தற்போது அவர் காணொளி, ஒலி, புத்தாக்க உள்ளடக்க நிபுணர்கள் சங்கம் (சிங்கப்பூர்) (VICPA), சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் ஊழியர் சங்கம் (IRASSU) ஆகிய அமைப்புகளுக்கு நிர்வாகச் செயலாளராகவும், என்டியுசியின் சுய தொழில்புரிவோர்ப் பிரிவின் (NTUC Freelancers and Self-Employed Unit) உதவி இயக்குநராகவும் இருக்கிறார்.

மசெக காக்கி புக்கிட் கிளைத் தலைவர் டாக்டர் ஃபைசல், பல் அறுவை சிகிச்சையாளராகப் பயிற்சி பெற்றவர். பல பொதுச் சுகாதார அமைப்புகளில் பணியாற்றியுள்ள அவர், தற்போது ‘நுஃபீல்டு ஹோல்டிங்ஸ்’ மருத்துவ இயக்குநராக உள்ளார்.

“மக்களின் முகங்களில் எப்பொழுதும் சிரிப்பைக் கொண்டுவர விரும்புகிறேன். நான் புத்தாக்கமிக்க சுகாதாரப் பரிசோதனைத் திட்டங்களை முன்வைப்பேன். தொழில்நுட்பம்வழி சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்களின் பங்கை விரிவாக்கி, பராமரிப்பு பெறுவதை இன்னும் சுலபமாக்கவும் சுகாதாரச் செலவுகளைக் குறைக்கவும் உழைப்பேன்,” என்றார் டாக்டர் ஃபைசல்.

டாக்டர் ஏட்ரியன் ஆங், 2012ஆம் ஆண்டு முதல் தோ பாயோ வெஸ்ட் - தாம்சன் பிரிவின் உறுப்பினராக இருந்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக அதன் கிளைச் செயலாளராகச் சேவையாற்றியுள்ளார்.

தற்போது அவர் மசெக பிடோக் ரெசவோர்-பொங்கோல் கிளைத் தலைவராகவும் ‘சை தியாம் மெய்ன்டனன்ஸ்’ நிறுவனத்தில் குழு நீடித்த நிலைத்தன்மை, புது வர்த்தக இயக்குநராகவும் உள்ளார். “பெரிய குடும்பங்களை ஆதரிக்கும் வகையில் நாங்கள் வசதிகளை மேம்படுத்துவோம்,” என்றார் அவர்.

திரு டேனியல் லியூ, மசெக பாய லேபார் கிளைத் தலைவர். மசெக நீ சூன் குழுத்தொகுதியில் 2014 முதல் தொண்டூழியராக இருந்துள்ளார். அவர் நகரத் திட்டமிடுதல், கட்டடக் கலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.

“நாங்கள் ஒவ்வொருவரும் பல ஆண்டுகாலம் சமூகத்தில் தொண்டாற்றிவந்துள்ளோம். அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்துக்காகவும் முதியோர் நலனுக்காகவும் உழைக்க விரும்புகிறோம்,” என்று கூறினார் திருவாட்டி சான் ஹுவெய் யூ.

எதிர்கட்சி வென்ற முதல் குழுத்தொகுதி என 2011ல் அல்ஜுனிட் குழுத்தொகுதி சிங்கப்பூர் சரித்திரத்தில் இடம்பெற்றது.

2011ல் லோ தியா கியாங் தலைமையிலான பாட்டாளிக் கட்சி 54.72% வாக்குகளைப் பெற்று முதன்முறையாக அக்குழுத்தொகுதியைக் கைப்பற்றியது. தொடர்ந்து அடுத்துவரும் தேர்தல்களிலும் பாட்டாளிக் கட்சி அங்கு வென்றது. சென்ற பொதுத் தேர்தலில் பிரித்தம் சிங் தலைமையிலான பாட்டாளிக் கட்சி 59.93% வாக்குகளை அங்குப் பெற்றது. அப்போது மசெக 40.07% வாக்குகளைப் பெற்றது.

அந்த மசெக குழுவில் வேட்பாளராக இருந்த திருவாட்டி சான் ஹுவெய் யூ, இம்முறைப் புதிய அணியுடன் மீண்டும் பழைய களத்தில் போட்டியிடுகிறார்.

குறிப்புச் சொற்கள்