அல்ஜுனிட்டை மீண்டும் உயிர்ப்பிப்போம்: மசெக

2 mins read
00a53a27-f95d-4f26-aa6b-d9a82148e96b
அல்ஜுனிட் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள். (இடமிருந்து) டேனியல் லியு, ஃபைசால் அப்துல் அசிஸ், சான் ஹுய் யு, ஏட்ரியன் ஆங், ஜகதீஸ்வரன் ராஜு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அல்ஜுனிட் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சிக் குழு வியாழக்கிழமை (மே 1) சிராங்கூன் விளையாட்டரங்கில் பிரசாரக் கூட்டம் நடத்தியது.

சான் ஹுய் யு, டேனியல் லியூ, ஃபைசால் அப்துல் அசிஸ், ஏட்ரியன் ஆங், ஜகதீஸ்வரன் ராஜு ஆகியோரைக் கொண்ட மக்கள் செயல் கட்சிக் குழு அல்ஜுனிட் குழுத் தொகுதியில் போட்டியிடுகிறது.

2011ஆம் ஆண்டிலிருந்து அத்தொகுதி பாட்டாளிக் கட்சி வசம் உள்ளது.

அதை மீண்டும் தன் வசப்படுத்தும் இலக்குடன் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் பிரசாரக் கூட்டத்துக்கான இறுதி நாளில் தங்கள் கருத்துகளையும் நிலைப்பாட்டையும் முன்வைத்தனர்.

அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கு உட்பட்ட குடியிருப்புப் பேட்டைகள் ஒழுங்காகப் பராமரிக்கப்படவில்லை என்ற வாதத்தை மசெக வேட்பாளர்கள் முன்வைத்தனர்.

அத்தொகுதியின் குடியிருப்புப் பேட்டைகளின் நிலை திருப்திகரமானதாக இல்லை என்றார் திரு டேனியல் லியூ.

அல்ஜுனிட் குழுத் தொகுதியில் விளையாட்டு மைதானங்கள், மறுசீரமைக்கப்படாமல் இருப்பதாகவும் குடியிருப்புப் பேட்டைகள் சுத்தமாக இல்லை என்றும் முதியோர் மற்றும் உடற்குறையுள்ளோர் எளிதில் நடமாடத் தேவையான வசதிகள் இல்லை என்றும் அவர் குறைகூறினார்.

அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அல்ஜுனிட் குழுத் தொகுதி மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் என்றும் துடிப்புடன் இருக்கும் என்றும் அல்ஜுனிட் குழுத் தொகுதி மசெக குழுவுக்குத் தலைமை தாங்கும் திருவாட்டி சான் ஹுய் யு வாக்குறுதி அளித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இருப்பது முக்கியம் என்றபோதிலும் அவர்கள் ஆற்றல்மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

அல்ஜுனிட் குழுத் தொகுதி மக்களின் குரலாகத் தமது குழு செயல்படும் என்று திருவாட்டி சான் கூறினார்.

பிரசாரக்கூட்டத்தில் பேசிய ஃபைசால் அப்துல் அசிஸ், அல்ஜுனிட் குழுத் தொகுதி மக்கள் செயல் கட்சியிடம் திரும்பும் காலம் கனிந்துவிட்டதாகக் கூறினார்.

“மக்கள் செயல் கட்சியின் செயல்பாட்டைச் சரிபார்க்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை என்று பாட்டாளிக் கட்சி கூறுகிறது. பாட்டாளிக் கட்சியின் செயல்பாட்டை யார் கண்காணிப்பது? நாங்கள் கண்காணிப்போம். அல்ஜுனிட் குழுத் தொகுதி குடியிருப்பாளர்களுக்கு மிகச் சிறந்த முறையில் சேவையாற்றுவோம்,” என்று திரு ஃபைசால் தெரிவித்தார்.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய மற்றொரு வேட்பாளரான ஜகதீஸ்வரன் ராஜு, அனைவரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கருத்து வேறுபாடு இருந்தாலும் கணிவுடன் பேச வேண்டும் என்றார் அவர்.

மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களைப் பாட்டாளிக் கட்சியினர் ஏளனம் செய்வதாகக் கூறி அதிருப்திக் குரல் எழுப்பினர்.

முன்னாள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சியாம் சீ டோங், லோ தியா கியாங் ஆகியோர் கண்ணியத்துடன் நடந்துகொண்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

விலைவாசி உயர்வு, வீட்டு விலை போன்ற சவால்களை சிங்கப்பூரர்கள் எதிர்கொள்வது தமக்குத் தெரியும் என்றார் அவர். அவைகுறித்து தமது அணியினர் நாடாளுமன்றத்தில் விவாதித்து பரிந்துரைகளை முன்வைப்பர் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்