சிங்கப்பூர் ராணுவப் பிரிவுகளுக்கு ஜூலை இறுதிக்குள் புதிய வகை இயந்திரத் துப்பாக்கிகள் வழங்கப்படும் என்று தற்காப்பு அமைச்சு புதன்கிழமை (ஜூலை 17) அறிவித்தது.
புதிய இயந்திரத் துப்பாக்கியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ராணுவப் பிரிவுகளுக்குப் படிப்படியாகப் பயிற்சி அளிக்கப்படும்.
Colt Infantry Automatic Rifle (IAR) 6940E-SG என்று அழைக்கப்படும் புதிய இயந்திரத் துப்பாக்கி கூடுதல் நம்பகமானது என்றும் அதைப் பயன்படுத்தி மிகத் துல்லியமாகக் குறிவைத்துச் சுட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டு 1982ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ள Ultimax 100 Section Automatic Weapon (SAW) இயந்திரத் துப்பாக்கிக்குப் பதிலாகப் புதிய வகை இயந்திரத் துப்பாக்கி பயன்படுத்தப்படும் என்று அமைச்சு கூறியது.
புதிய இயந்திரத் துப்பாக்கி ஏப்ரல் மாதத்திலிருந்து படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
பழைய இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தி அதிகபட்சம் 460 மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைச் சுட முடியும்.
புதிய வகை இயந்திரத் துப்பாக்கியால் அதிகபட்சம் 600 மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைச் சுட முடியும்.
அத்துடன், ஒரு நிமிடத்தில் 700லிருந்து 1,000 தோட்டாக்கள் அதிலிருந்து வெளியாகும். இது பழைய துப்பாக்கியைவிட அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
புதிய வகை இயந்திரத் துப்பாக்கியின் எடை, இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் எடையைவிட குறைவு. புதிய துப்பாக்கியின் எடை 4.3 கிலோ.
குறிவைக்கப்படும் பொருளை மும்மடங்கு பெரிதாகக் காட்டும் தொழில்நுட்பத்தைப் புதிய இயந்திரத் துப்பாக்கிக் கொண்டுள்ளது. அத்துடன், இலக்கின் மீது சிவப்புப் புள்ளியை அது பாய்ச்சும்.
ராணுவ வீரர்கள் துல்லியமாகச் சுட இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.