‘மொபைல் கார்டியன்’ செயலியால் பாதிக்கப்பட்ட அனைத்துச் சாதனங்களும் ஆகஸ்ட் 16க்குள் சரிசெய்யப்படும்

‘மொபைல் கார்டியன்’ செயலியால் பாதிக்கப்பட்ட அனைத்துச் சாதனங்களும் ஆகஸ்ட் 16க்குள் சரிசெய்யப்படும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Aug 2024 - 5:19 pm

2 mins read

‘மொபைல் கார்டியன்’ செயலியில் ஏற்பட்ட இணையப் பாதுகாப்பு அத்துமீறலினால் பாதிக்கப்பட்ட அனைத்துச் சாதனங்களும் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் சரிசெய்யப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு தேசிய தேர்வுகளை எழுதும் சாதாரண நிலை, வழக்க நிலை மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அது கூறியது.

“அடுத்த வார இறுதிக்குள் எஞ்சியிருக்கும் பாதிக்கப்பட்ட சாதனங்களைச் சரிசெய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்று அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் கூறியது.

பாதிக்கப்பட்ட சாதனங்களை வழக்கமான பயன்பாட்டுக்குக் கொண்டுசெல்ல, பள்ளிகளுடன் செயல்பட்டு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

மாணவர்கள் தங்கள் சாதனங்களைச் சரிசெய்ய உதவுவதற்காக அமைச்சு, பள்ளிகளில் கூடுதல் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.

மாணவர்களுக்கு வழிகாட்டிக் குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

‘மொபைல் கார்டியன்’ செயலி, பிள்ளைகள் சாதனத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பெற்றோர் நிர்வகிக்க உதவக்கூடியது.

அதைப் பயன்படுத்தி பிள்ளைகள் திரையில் செலவிடும் நேரத்தை அவர்கள் கட்டுப்படுத்தலாம். குறிப்பிட்ட சில இணையத்தளங்களையும் செயலிகளையும் பிள்ளைகள் அணுகாமலும் தடுக்க இயலும்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி பின்னிரவில் சில பள்ளிகள் அவற்றின் மாணவர்கள் சிலரால் ‘ஐபேட்’, ‘குரோம்புக்’ சாதனங்களில் சேமித்திருந்த தகவல்களையும் சில செயலிகளையும் பயன்படுத்த இயலவில்லை என்று தெரிவித்ததாகக் கல்வி அமைச்சு கூறியது.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் சாதனங்களில் இருந்த தகவல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும், சில மாணவர்கள் பல்லாண்டுகாலக் குறிப்புகளை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தனது தளத்தை ஊடுருவி உலகெங்குமுள்ள வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் இடம்பெற்றதாக ‘மொபைல் கார்டியன்’ நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அந்த இணையத் தாக்குதலால் இங்குள்ள 26 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 13,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்த பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்துக்கும் மாணவர்கள் ஜூலை 30ஆம் தேதி எதிர்கொண்ட தொழில்நுட்பச் சிக்கலுக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சு கூறியது.

அதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் சாதனங்களிலிருந்தும் ‘மொபைல் கார்டியன்’ செயலி நீக்கப்படும் என்று ஆகஸ்ட் 5ஆம் தேதி அமைச்சு அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்
அத்துமீறல்இணையப் பாதுகாப்புமாணவர்கள்