2024ல் வெளிநாட்டினர் தானியங்கித் தடங்களைப் பயன்படுத்தலாம்: ஐசிஏ

2024ல் வெளிநாட்டினர் தானியங்கித் தடங்களைப் பயன்படுத்தலாம்: ஐசிஏ

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Feb 2024 - 4:15 pm

2 mins read

சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டு வருகையாளர்களும், அவர்கள் எந்த நாட்டுக் குடியுரிமையைப் பெற்றிருந்தாலும் 2024ஆம் ஆண்டில் ஆகாய, நில, கடல் சோதனைச் சாவடிகளில் தானியங்கித் தடங்களைப் பயன்படுத்தலாம்.

முன்கூட்டியே பதிவுசெய்யாமல் அவர்கள் இதனைச் செய்ய முடியும். அவர்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேறும்போது, கடப்பிதழ்களைக் காட்ட வேண்டியதில்லை.

உலகிலேயே, இவ்வாறு செய்யவிருக்கும் முதல் நாடு சிங்கப்பூராகும்.

சென்ற ஆண்டின் வருடாந்திரப் புள்ளிவிவரங்களை வெளியிட்டபோது, இந்த நடைமுறை 2024ன் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்று குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) கூறியது.

சோதனைச் சாவடிகளில் உள்ள தற்போதைய முகப்புகளுக்கும் தடங்களுக்கும் பதிலாக, புதிய தானியங்கித் தடங்கள் கட்டங்கட்டமாகப் பொருத்தப்படும் என்று ஐசிஏ கூறியது. இதனால், சிங்கப்பூர் குடியிருப்பாளர்களும் இங்கிருந்து வெளியேறுவோரும் கடப்பிதழ்களைக் காட்ட வேண்டியதில்லை.

சென்ற ஆண்டு 160க்கும் மேற்பட்ட தானியங்கித் தடங்கள் பொருத்தப்பட்டன. இவ்வாண்டு மேலும் 230 தடங்கள் பொருத்தப்படவுள்ளன.

ஐசிஏயின் புதிய அனுமதி பெறும் முறையின் ஒரு பகுதியாக இந்தத் தானியங்கித் தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அனைத்துப் பயணிகளும் சுமுகமாக குடிநுழைவு அனுமதியைப் பெறுவதே நோக்கம்.

தற்போது சிங்கப்பூர் குடியிருப்பாளர்களும் 60 வெளிநாட்டு அதிகார வரம்புக்குட்பட்ட கடப்பிதழ்களைக் கொண்டவர்களும் மட்டுமே தானியங்கித் தடங்களைப் பயன்படுத்தலாம்.

சென்ற ஆண்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான அளவு அதிகரிப்பு காணப்பட்டதாக ஐசிஏ கூறியது. அனைத்து சோதனைச்சாவடிகளையும் கிட்டத்தட்ட 193 மில்லியன் பேர் கடந்ததாக அது தெரிவித்தது. 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 84 விழுக்காடு அதிகம். 2022ஆம் ஆண்டில் 105 மில்லியன் சுற்றுப்பயணிகள் சோதனைச்சாவடிகளைக் கடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முந்திய காலகட்டத்தைக் காட்டிலும், 2023ஆம் ஆண்டுக்கான மொத்த எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது. 2019ஆம் ஆண்டில், 217 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுப்பயணிகள் சோதனைச்சாவடிகளைக் கடந்தனர்.

இருப்பினும் பள்ளி விடுமுறை, பொது விடுமுறைக் காலகட்டங்களில், நிலச் சோதனைச் சாவடிகளில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து கொவிட் கிருமிப் பரவலுக்கு முந்திய காலகட்டத்தின் நிலையை மிஞ்சியதாக ஐசிஏ கூறியது.

உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளை ஏறக்குறைய 13.6 மில்லியன் சுற்றுப்பயணிகள் கடந்ததாக அது கூறியது. அன்றாடம் சராசரியாக கிட்டத்தட்ட 440,000 பயணிகள் கடந்ததாக அது தெரிவித்தது.

கிருமிப் பரவலுக்கு முந்திய காலகட்டத்தில், நிலச் சோதனைச் சாவடிகளில் அன்றாடம் ஏறக்குறைய 400,000 சுற்றுப்பயணிகள் கடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்