‘ஓ’ நிலைத் தேர்வில் அனைவரும் தேர்ச்சி

உயர்கல்விக்குத் தகுதிபெற்ற மதரசா மாணவர்கள்

2 mins read
e9f25066-e8c0-4d62-a4f6-d923811dc486
சிங்கப்பூர் மதரசாக்களிலிருந்து மொத்தம் 209 மாணவர்கள் 2025ல் ‘ஓ’ நிலை தேர்வு எழுதினர். - படம்: சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம்

கடந்த ஆண்டு பொதுக் கல்­விச் சான்­றி­தழ் சாதா­ர­ண நி­லைத் தேர்வுகளை (‘ஓ’ நிலை) எழுதிய மதரசா மாணவர்கள், புதன்கிழமை (ஜனவரி 14) தத்தம் பள்ளிகளில் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

சிங்கப்பூர் மதரசாக்களில் இருந்து மொத்தம் 209 மாணவர்கள் 2025ல் ‘ஓ’ நிலைத் தேர்வெழுதினர். இவர்கள் அனைவரும் உயர்நிலைக்குப் பிந்திய கல்விக்கான (post-secondary education) குறைந்தபட்ச தகுதிநிலையை எட்டியுள்ளனர் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்துள்ளது.

ஜனவரி 14ஆம் தேதி தத்தம் மதரசா பள்ளிகளில் தங்கள் ‘ஓ’ நிலைத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
ஜனவரி 14ஆம் தேதி தத்தம் மதரசா பள்ளிகளில் தங்கள் ‘ஓ’ நிலைத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். - படம்: சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம்

“சவால்மிக்க இஸ்லாமியக் கல்வியைத் தொடரும் அதே வேளையில், மற்ற பாடங்களிலும் சிறந்து விளங்க நமது மதரசா மாணவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் உதவியுள்ளன.

“அவர்களின் மனவுறுதியும் தகவமைப்புத் திறனும் பல்வேறு துறைகளில் அவர்கள் சிறந்து விளங்க வழிவகுக்கும்,” என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், உள்துறை மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் தன்னம்பிக்கை, நற்பண்பு, ஆற்றல் ஆகியவற்றை வளர்க்க வலுவான ஒத்துழைப்பு உதவும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், கல்வியாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அவர்களது முழுமையான ஆதரவிற்காக நன்றி தெரிவித்தார்.

தேர்வு முடிவுகளைப் பெற்றவர்களில் மதரசா அல்-அரேபியா அல்-இஸ்லாமியாவைச் சேர்ந்த 16 வயது மாணவி அகமது சைஃபுதீன் ஆயிஷாவும் ஒருவர். இவர் இரண்டு பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார். உயர்நிலைக் கல்வியை முடித்ததில் நிம்மதியடைவதாகவும் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.

அகமது சைஃபுதீன் ஆயிஷா, 16.
அகமது சைஃபுதீன் ஆயிஷா, 16. - படம்: யோகிதா அன்புச்செழியன்

தமது பள்ளி அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட ஆயிஷா, மதரசா மாணவர்கள் மற்ற உயர்நிலைப் பள்ளிகளைப் போன்றே கல்வித்திட்டத்தைப் பின்பற்றுவதாகவும், அதே வேளையில் அரபு மொழி, ‘திராசாத் தீனியா’ (Dirasat Deeniyah) போன்ற கூடுதல் இஸ்லாமியப் பாடங்களைப் பயில்வதாகவும் சொன்னார்.

“என்மீது அக்கறைகொண்டு, என்னை ஆதரிக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்த இங்குள்ள ஆசிரியர்களுக்கும் என் நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்றார் ஆயிஷா.

பலதுறைத் தொழிற்கல்லூரியில் அறிவியல் தொடர்பான படிப்பைத் தொடர விரும்பும் ஆயிஷா, எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் பணியாற்ற இலக்கு கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்