தேசிய சேவையாளர்களின் படித்தொகை உயர்கிறது

தேசிய சேவையாளர்களின் படித்தொகை உயர்கிறது

2 mins read
4887ce28-9058-46d4-87fc-8d522b675dee
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய சேவையாளர்கள் அனைவரின் மாதாந்திரப் படித்தொகை $125 முதல் $200 வரை உயர்த்தப்படுகிறது. அவரவர்களின் பதவியையும் பிரிவையும் பொறுத்து தொகையின் அளவு இருக்கும்.

சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த தேசிய சேவையாளர்கள் அனைவருக்கும் ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய உயர்வு நடப்புக்கு வரும் என்று தற்காப்பு அமைச்சும் உள்துறை அமைச்சும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

புதிய மாற்றத்தின்படி, தேசிய சேவையாளர்களின் படித்தொகை 10.9 விழுக்காடு முதல் 21.7 விழுக்காடு வரை உயர்கிறது.

புதிதாகச் சேரும் முழுநேர தேசிய சேவையாளருக்கான படித்தொகை $755ஆக உயரும். இது தற்போது $630 ஆக உள்ளது.

சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த கடற்படை முக்குளிப்பாளர் அல்லது சிங்கப்பூர் காவல்துறையின் திறன் உத்தி செயற்குழுவைச் சேர்ந்த படைவீரர் அல்லது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஆக இருக்கும் முழுநேர தேசிய சேவையாளருக்கு $1,050 ஆக உள்ள தற்போதைய படித் தொகை ஜூலை 1 முதல் $1,250 ஆக உயரும்.

முழுநேர தேசிய சேவையாளர்கள் தாங்கள் சேவையாற்றும் பதவியில் ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் 5 விழுக்காட்டு அதிகரிப்பைக் காண்பார்கள். போர்க்காலப் படைவீரர்கள் முந்தைய வேலை ஆண்டில் தேசிய சேவை நடவடிக்கை ஒன்றைத் திருப்திகரமாக நிறைவேற்றினால், 5லிருந்து 10 விழுக்காடு வரையிலான அதிகரிப்பைப் பெறலாம் என்று அமைச்சுகள் குறிப்பிட்டன.

மாற்றியமைக்கப்பட்ட படித்தொகையில், $75 குறைந்தபட்ச வேலைப்பிரிவு படித்தொகையும் அடங்கும்.

போர்ப்படை போன்ற குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுக்கப்படும் கூடுதல் படித்தொகை இதில் சேர்த்துக்கொள்ளப்படாது.

கடந்த 10 ஆண்டுகளில், தேசிய சேவை படித்தொகையில் மூன்று முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் கடைசியாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனைத்து முழுநேர தேசிய சேவையாளர்களும் $70 முதல் $120 வரையிலான படித்தொகை அதிகரிப்பைப் பெற்றனர்.

முழுநேர தேசிய சேவையாளர்களின் தனிப்பட்ட அடிப்படை பராமரிப்புக்கு உதவும் இந்த தேசிய சேவை படித்தொகை தொடர்ந்து போதுமானதாக அமைந்திருக்க அவ்வப்போது மறுஆய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படுவதாக அமைச்சுகள் கூறின.

குறிப்புச் சொற்கள்