சிங்கப்பூரின் 180 தொடக்கப்பள்ளிகளிலும் ஆற்றல்மிகு மாணவர்களுக்காக கூடுதல் சவால் விடுக்கும் கல்வித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
‘ஜிஇபி’ (Gifted Education Programme) எனப்படும் மீத்திறன் கல்வித்திட்டத்தில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் குறித்து அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், வருங்காலத்தில் ஆற்றல்மிகு மாணவர்களுக்கென மேலும் அதிக கல்வித்திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
பிரதமர் லாரன்ஸ் வோங் தமது முதல் தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்ததன்படி, ஆற்றல்மிகு மாணவர்களுக்கான பள்ளிக் கல்வித்திட்டங்கள்வழி ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் 10 விழுக்காட்டினர், அதாவது ஆண்டுக்கு 3,000 மாணவர்கள் பயனடைவர் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது ஏழு விழுக்காட்டினர் மட்டுமே பயனடைகின்றனர்.
மீத்திறன் கல்வித்திட்டத்தைச் செயல்படுத்திவரும் ஒன்பது பள்ளிகளுக்குத்தான் மாணவர்கள் சென்றாகவேண்டும் என்ற நிலை மாறவுள்ளது. தங்களின் பள்ளிகளில் இருந்தவாறே ஆற்றல்மிகு மாணவர்களுக்குரிய திட்டங்களில் பங்கேற்கலாம்.
நாற்பது ஆண்டுகளாக நடப்பில் உள்ள மீத்திறன் கல்வித்திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்களின் ஓர் அங்கம் இது. தற்போது இந்த மீத்திறன் கல்வித்திட்டம், மாணவர் குழுவின் முதல் ஒரு விழுக்காட்டினருக்கு மட்டுமே அமைந்துள்ளது.
அனைத்துத் தொடக்கப்பள்ளிகளிலும் ஆற்றல்மிகு மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கெனச் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். இக்குறிப்பிட்ட மாணவர்களுக்கு ஏற்ற திட்டங்களும் உண்டு என்று கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
கல்வி அமைச்சின் தலைமையகத்தின் ஆதரவுடன் வகுக்கப்பட்ட கல்விசார்ந்த, கல்விசாராத உட்பிரிவுகளில் தங்களது பள்ளிகளில் வழங்கப்படும் மீத்திறன் கல்வித் திட்டங்களை ஆற்றல்மிகு மாணவர்கள் அணுக முடிகிறது.
இதனால், மாணவர்கள் தங்களின் ஆற்றலை மெருகேற்றிக்கொள்வதுடன் தங்களது பலங்களையும் ஆர்வங்களையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது என்று கல்வி அமைச்சு விளக்கியது.
தொடர்புடைய செய்திகள்
ஆற்றல்மிகு மாணவர்களால் மேலும் விரைவாகக் கற்றுக்கொள்ள முடிவதுடன் சிக்கல்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகண்டு செயல்படும் உந்துதலையும் பெறுவர். எளிதில் புலப்படாத கூறுகளையும் சுலபமாகப் புரிந்துகொண்டு கையாளக்கூடிய தயார்நிலையைப் பெறுவர் என்றது கல்வி அமைச்சு.