தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசாங்க ஊழியர்கள் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்: சான் சுன் சிங்

2 mins read
62ddd901-369c-4a3e-83cd-4d82fb8adbc6
சிங்கப்பூரில், அரசாங்க ஊழியர் ஒருவர் அதிகாரபூர்வ திட்டங்களில் தம்முடன் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அன்பளிப்புகளைப் பெறுவது ஏற்றுக்கொள்ளப்படாது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அனைத்து அரசாங்க ஊழியர்களிடமும் உயர்தர நடத்தை வேண்டும் என்று அரசாங்கச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருக்கிறார்.

சிங்கப்பூரில், அரசாங்க ஊழியர் ஒருவர் அதிகாரபூர்வ திட்டங்களில் தம்முடன் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அன்பளிப்புகளைப் பெறுவது ஏற்றுக்கொள்ளப்படாது.

அவ்வாறு நடந்தால், அரசாங்கப் பாரபட்சமின்மையிலும் நேர்மையிலும் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை கீழறுக்கப்படும் என்றார் அவர்.

“தனியார் அமைப்போ அரசாங்க அமைப்போ, அனைத்து அமைப்புகளின் தலைவர்களிடமும் சிங்கப்பூரர்கள் எதிர்பார்க்கும் பண்பு இது,” என்று கல்வி அமைச்சருமான திரு சான் கூறினார்.

நாடாளுமன்றத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரிவு 165 குறித்தும் அரசாங்கச் சேவையில் அதன் தாக்கம் பற்றியும் கேட்ட கேள்விகளுக்கு, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் சார்பில் திரு சான் பதில் அளித்துப் பேசினார்.

அக்டோபர் மாதத்தில், முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவற்றில் நான்கு, அரசாங்க ஊழியராக அன்பளிப்புகள் பெற்றதற்காக பிரிவு 165ன் கீழ் சுமத்தப்பட்டவை.

சிங்கப்பூரின் ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் அதிக பலன்தரக்கூடியவையாக அமைய மறுஆய்வு செய்யப்பட வேண்டுமா என்று பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் கேள்வி எழுப்பினார்.

தனிநபர்களும் முன்னணித் திறனாளர்களும் அரசாங்கச் சேவையில் சேர்வதையோ அதற்குப் பங்களிப்பதையோ பிரிவு 165 தடுக்குமா என்று சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிமும், யோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங்கும் கேட்டனர்.

அதற்கு, அரசாங்கச் சேவையில் நல்லவர்கள் சேர்வதையோ அதற்குப் பங்களிப்பதையோ விதிமுறைகள் தடுக்காது என்று திரு சான் பதில் அளித்தார்.

“ஒப்புநோக்க, ஊழலற்ற, நேர்மையான அரசாங்கத்தை உறுதிசெய்யும் முறையோ பண்போ நம்மிடம் இல்லாவிட்டால், நம்முடன் இணைய தனியார் துறையிலிருந்து தகுந்தவர்களை நம்மால் ஈர்க்க முடியாது,” என்றார் திரு சான்.

குறிப்புச் சொற்கள்