பூத்தியேன் உணவகங்களில் உணவருந்தும் வாடிக்கையாளர்கள் பொருள், சேவை வரி மற்றும் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 விழுக்காடு பொருள், சேவை வரியால் ஏற்படும் செலவை பூத்தியேன் நிறுவனம் ஏற்பதாக அக்குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான 56 வயது திரு ஃபோங் சீ சுங் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, வாடிக்கையாளர்களிடமிருந்து 10 விழுக்காடு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றார் அவர்.
ஆகஸ்ட் 20ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் இருக்கும் 19 பூத்தியேன் உணவகங்கள், சன்டெக் சிட்டியிலும் கிரேட் வேர்ல்டிலும் உள்ள ‘அங்கிள் போங் ஹாட் பாட்’ உணவகம், 12 வெர்டுன் சாலையில் உள்ள சேம் லியோங் ஸ்திரீட் சிக்கன் ரைஸ் உணவகத்திலும் பொருள், சேவை வரி மற்றும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது.
இது தற்காலிகமான ஏற்பாடு அல்ல என்று திரு ஃபோங் உறுதி அளித்தார்.
இதுகுறித்து ஜனவரி மாதத்திலிருந்து திட்டமிடப்பட்டு வந்ததாக அவர் கூறினார்.

