தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீஷான்-தோ பாயோவை தவிர்த்து அனைத்து நகர மன்றங்களுக்கும் உயர் தரநிலை

2 mins read
f8f1c255-c1a9-4718-8370-899ec9ec9672
இங்குள்ள 17 நகர மன்றங்களில் பீஷான்-தோ பாயோ நகர மன்றம் மட்டும் மஞ்சள் தரநிலையைப் பெற்றுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆக அண்மைய நகர மன்ற நிர்வாக அறிக்கையின்படி, இங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து நகர மன்றங்களும் ஆக அதிக புள்ளிகளுடன் பச்சை தரநிலையைப் பெற்றுள்ளன.

இங்குள்ள 17 நகர மன்றங்களில் பீஷான்-தோ பாயோ நகர மன்றம் மட்டும் மஞ்சள் தரநிலையைப் பெற்றுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 11) தெரிவித்தது.

மூன்று திட்டங்களில் பணிகளைத் தொடங்குவதற்கும் அவற்றுக்காக நிதியை வழங்குவதற்கும் முன்பு அதிகாரிகளிடமிருந்து அந்நகர மன்றம் ஒப்புதல் பெறவில்லை. தோ பாயோ, தாம்சன், மேரிமவுண்ட் உட்பட மத்திய சிங்கப்பூரில் குடியிருப்புப் பேட்டைகளை நிர்வகிக்கும் அது, பின்னோக்கிப் பார்த்து ஒப்புதல் கோரியது. பின்னர் அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

விதிகளுக்கு இணங்காத ஒரே வகை சம்பவங்களின் கடுமை மிதமானது எனக் கருதப்பட்டதால், பீஷான்-தோ பாயோ நகர மன்றத்துக்கு மஞ்சள் தரநிலை வழங்கப்பட்டதாக அமைச்சு சொன்னது. ஆகக் குறைவான உத்தேசத் தரநிலை சிவப்பு.

நகர மன்றங்களின் நிதி அறிக்கைகள், கணக்கு தணிக்கையாளர்களின் அறிக்கைகள், கடந்த நிதியாண்டில் நகர மன்றங்கள் சட்டம், விதிகளை ஒத்து நடப்பதன் மீதான அவற்றின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அமைச்சின் வருடாந்தர அறிக்கையின் இரண்டாவது பகுதியே டிசம்பர் 11 அறிக்கை.

ஆண்டு நடுப்பகுதியில் வெளியான அறிக்கையின் முற்பகுதி, குடியிருப்புப் பேட்டைகளின் தூய்மை, பராமரிப்பு போன்றவற்றின் செயல்பாடுகளில் நகர மன்றங்களின் செயல்திறனை மதிப்பிடுகிறது. ஜூன் அறிக்கையில் அனைத்து நகர மன்றங்களும் பச்சை தரவரிகளைப் பெற்றிருந்தன.

பீஷான்-தோ பாயோ நகர மன்றம் ஒருபுறமிருக்க, மேலும் மூன்று நகர மன்றங்கள் விதிகளுக்கு இணங்காதது குறித்து அமைச்சு அதன் அண்மைய அறிக்கையில் கவனத்துக்குக் கொண்டுவந்தது. ஆனால், இந்த மீறல்களின் கடுமை குறைவாக இருந்ததால், அந்த நகர மன்றங்களுக்கு பச்சை தரநிலை வழங்கப்பட்டது.

அங் மோ கியோ நகர மன்றம், அதன் மின்தூக்கி பழுதுபார்ப்பு நிதிக்கு நிகரான மானியத்தில் ஒரு பகுதியை வர்த்தகச் சொத்துக்குப் பதிலாக குடியிருப்புச் சொத்துக்கு தவறுதலாக ஒதுக்கியிருந்தது.

மரின் பரேட் நகர மன்றம், அதன் புதிய சைக்கிள் நிறுத்த அடுக்கை (bicycle rack) பொருத்துவதற்கு முன்னர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து (வீவக) அனுமதி கோரவில்லை.

அதேபோல மார்சிலிங்-இயூ டீ நகர மன்றம், பொதுச் சொத்தில் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு வீவகவிடமிருந்து அனுமதி பெறவில்லை.

அடையாளம் காணப்பட்ட அனைத்து விவகாரங்களும் நிர்வாக ரீதியிலான கவனக்குறைவால் ஏற்பட்டதாகவும் பின்னர் அவை சரிசெய்யப்பட்டதாகவும் அமைச்சு சொன்னது.

மேரிமவுண்ட் எம்.பி. கான் சியாவ் ஹுவாங் தலைமையிலான பீஷான்-தோ பாயோ நகர மன்றம், நகர மன்றங்கள் சட்டத்தை மீண்டும் மீறுவதைத் தவிர்க்க தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியது.

குறிப்புச் சொற்கள்